2011-11-09 14:43:26

கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண்களுக்கு திருச்சபை குணமளிக்கும் வழிகளைக் காட்டுகிறது - மெக்சிகோ நகரின் பேராயர்


நவ.09,2011. கருக்கலைப்பு செய்து கொள்வதால் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாகும் பெண்களுக்கு திருச்சபை கருணையையும், குணமளிக்கும் வழிகளையும் காட்டுகிறது என்று மெக்சிகோ நகரின் பேராயர் கர்தினால் Norberto Carrera கூறினார்.
மெக்சிகோ நகரில் வெளியாகும் “Desde la Fe” என்ற செய்தித்தாளுக்கு அவர் அண்மையில் அளித்த பேட்டியொன்றில் கருக்கலைப்பைப் பற்றி திருச்சபையின் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.
கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண்களை திருச்சபை கண்டனம் செய்கிறதா என்ற கேள்விக்கு, திருச்சபை எப்போதுமே ஒப்புரவையும், கருணையையும் வலியுறுத்தி வருகிறதென்று கர்தினால் Carrera சுட்டிக் காட்டினார்.
கருக்கலைப்பு செய்துகொள்ளும் பெண்கள் அந்நேரத்தில் அனுபவிக்கும் வேதனை, அதற்கு பின் அவர்கள் உள்ளத்தில் உருவாகும் குற்றஉணர்வு, வெறுமை ஆகியவற்றை குணப்படுத்தும் முயற்சியில் திருச்சபை அதிக அக்கறை காட்டுகிறது என்றும், கருக்கலைப்பை துச்சமாக எண்ணும் பலர் இந்த உணர்வுகளுக்கு மதிப்பு தருவதில்லை என்றும் கர்தினால் Carrera கூறினார்.
கருக்கலைப்பை ஒரு மனித உரிமை பிரச்சனையாக விளம்பரப்படுத்தும் பெண்ணுரிமை இயக்கங்கள், குழந்தை பிறப்பு நேரத்தில் உண்டாகும் உயிர்ச் சேதங்கள் கருக்கலைப்பினால் காப்பாற்றப்படும் என்று கூறுவதும் மக்களை திசைத் திருப்பும் முயற்சி என்று கர்தினால் வலியுறுத்திக் கூறினார்.
கருவுற்ற பெண்களை ஆதரவற்றவர்களாய் விட்டுச் செல்லும் ஆண்கள் இறைவன் முன் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்றும், எனவே அவர்கள் மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் தன் பேட்டியின் இறுதியில் மெக்சிகோ நகர் பேராயர் கர்தினால் Carrera வேண்டுகோள் விடுத்தார்.







All the contents on this site are copyrighted ©.