2011-11-09 14:51:45

இந்து மதத்தைச் சார்ந்த நான்கு மருத்துவர்கள் பாகிஸ்தானில் கொலை


நவ.09,2011. தெற்கு பாகிஸ்தானில் சிந்து மாநிலத்தில் இந்து மதத்தைச் சார்ந்த நான்கு மருத்துவர்கள் இத்திங்களன்று கொல்லப்பட்டுள்ளனர்.
மருத்துவர்கள் அசோக், நரேஷ், அஜீத், மற்றும் சத்தியா பால் ஆகியோர் Chak என்ற ஊரில் அவர்கள் பணிபுரிந்து வந்த மருத்துவ மனையிலேயே ஆயுதம் தாங்கிய ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில் இந்தப் பகுதியில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே உருவான ஒரு கருத்து வேறுபாட்டால் இந்தக் கொலைகள் நிகழ்ந்திருக்கலாம் என்றும், இந்தக் கொலைகளில் தொடர்புடைய இருவரை தாங்கள் கைது செய்திருப்பதாகவும் காவல் துறையினர் கூறியுள்ளனர்.
அண்மையில் கொண்டாடப்பட்ட தீபாவளி விழாவன்று இந்து மக்களை வாழ்த்திய பாகிஸ்தான் அரசுத் தலைவர் Asif Zardari அவர்களைச் சந்தித்த இந்து மக்களின் தலைவர்கள் சிலர், இக்கொலைகளில் ஈடுபட்டோரைக் கண்டுபிடிக்கவும், தங்களுக்குத் தகுந்த பாதுகாப்பு தரவும் வேண்டுமென்று விண்ணப்பித்துள்ளனர்.
பாகிஸ்தானில் சிறுபான்மையினர் தொடர்ந்து அனுபவிக்கும் அநீதிகளுக்கும், துன்பங்களுக்கும் இந்தக் கொலைகள் மற்றுமொரு எடுத்துக்காட்டு என்று பாகிஸ்தானில் செயலாற்றும் பாப்பிறை மறைபணிக் கழகத்தின் இயக்குனர் அருள்தந்தை மாரியோ ரோட்ரிகுவேஸ் FIDES செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.