2011-11-08 14:38:03

திருத்தந்தை அசிசி நகரில் விடுத்த அழைப்பே நாம் எதிர்காலத்தில் பின்பற்றக் கூடிய சிறந்த பாதை - நேபாளத்தின் இஸ்லாமியத் தலைவர்கள்


நவ.08,2011. மதங்களுக்கிடையே வன்முறையற்ற நல்லுறவும் அமைதியும் வளர வேண்டுமென்று திருத்தந்தை அசிசி நகரில் விடுத்த அழைப்பே நாம் எதிர்காலத்தில் பின்பற்றக் கூடிய சிறந்த பாதை என்று நேபாளத்தைச் சேர்ந்த இஸ்லாமியத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
இத்திங்களன்று கொண்டாடப்பட்ட பக்ரீத் விழாவையொட்டி, நேபாளத்தில் இஸ்லாமிய மக்கள் சார்பில் செய்தி வெளியிட்ட தலைவர்கள், மதங்களுக்கிடையே உருவாக வேண்டிய உரையாடலை திருத்தந்தை வலியுறுத்தியிருப்பதைப் பாராட்டினர்.
இந்துக்களைப் பெரும்பான்மையாய் கொண்டிருக்கும் நேபாளத்தில், 2006ம் ஆண்டு வரை கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் விழாக்கள் கொண்டாடப்படாமல் இருந்தன. 2006ம் ஆண்டு அந்நாடு மதசார்பற்ற நாடு என்று அறிவிக்கப்பட்டபின்னர், கிறிஸ்தவ, இஸ்லாமிய விழாக்களும் அரசு விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், அந்நாட்டில் மதங்களுக்கிடையில் இன்னும் சகிப்புத் தன்மை வளர வேண்டியுள்ளது என்றும், திருத்தந்தை அசிசி நகரில் காட்டிய வழியே மதங்களிடையே இன்னும் ஆழமான புரிதலை உருவாக்கும் என்றும் இஸ்லாமியத் தலைவர்கள் கூறினர்.








All the contents on this site are copyrighted ©.