2011-11-08 14:31:08

அமைதியையும், ஒப்புரவையும் வளர்ப்பதே மதங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு - வத்திக்கான் உயர் அதிகாரி


நவ.08,2011. மக்களிடையே அமைதியையும், ஒப்புரவையும் வளர்ப்பதே மதங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு என்றும், பிரிவுகளையும் பிரச்சனைகளையும் உருவாக்குவது அல்ல என்றும் வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்தியாவில் தற்போது பயணம் மேற்கொண்டுள்ள திருப்பீடத்தின் பல்சமய உரையாடல் அவைத் தலைவரான கர்தினால் Jean-Louis Tauran, பூனேயில் நடைபெறும் ஒரு பலசமயக் கருத்தரங்கில் இத்திங்களன்று பேசுகையில் இவ்வாறு கூறினார்.
பூனேயில் ஆசியாவின் மிகப் பெரும் குருத்துவ பயிற்சி மையமாகக் கருதப்படும் ஞான தீப வித்யாபீத் என்ற நிறுவனத்தில் இப்புதன் வரை நடைபெறும் ஒரு பல்சமயக் கருத்தரங்கில் கர்தினால் தவ்ரான் பேசுகையில், மதங்களின் பெயரால் ஒரு சில சுயநலவாதிகள் பரப்பி வரும் அடிப்படைவாதப் போக்கு வருத்தம் தருகிறது என்று கூறினார்.
மதங்களைப் பயன்படுத்தி வெறுப்பை விதைக்கும் எந்த ஒரு அமைப்புக்கும் மக்கள் இனி செவிசாய்க்காமல், ஒற்றுமையையும், ஒப்புரவையும் வளர்க்க முயல வேண்டும் என்று கர்தினால் வேண்டுகோள் விடுத்தார்.
பல கலாச்சாரங்கள், மதங்கள் ஆகிவற்றின் சங்கமமான இந்தியாவில் பல் சமய உரையாடல் இந்தியர்களின் அன்றாட வாழ்வு முறையாக மாற வேண்டும் என்று திருப்பீடத்தின் பல்சமய உரையாடல் அவையில் உறுப்பினராகப் பணியாற்றும் பூனே ஆயர் தாமஸ் தாப்ரே கூறினார்.








All the contents on this site are copyrighted ©.