2011-11-05 14:41:47

நவம்பர் 06, வாழ்ந்தவர் வழியில்... ஜேம்ஸ் நெய்ஸ்மித்


உலகின் பல நாடுகளிலும் புகழ்பெற்ற 'கூடைப்பந்து' என்ற விளையாட்டை உருவாக்கியவர் ஜேம்ஸ் நெய்ஸ்மித் (James Naismith). இவர் 1861ம் ஆண்டு, நவம்பர் 6ம் தேதி, கனடா நாட்டின் Ontario மாநிலத்தில் பிறந்தார். ஜேம்ஸுக்கு 9 வயதானபோது, இவரது பெற்றோர் இருவரும் நோயுற்று இறந்தனர். ஜேம்ஸ், பக்தி நிறைந்த இவரது பாட்டியால் வளர்க்கப்பட்டார்.
விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டிருந்த ஜேம்ஸ், அத்துறையிலேயே தன் பட்டப் படிப்பை முடித்தார். இவர் தனது 30வது வயதில் 'கூடைப்பந்து' விளையாட்டை 13 விதிகளுடன் உருவாக்கினார்.
Kansas பல்கலைக்கழக விளையாட்டு வீரர்களின் தலைமைப் பயிற்சியாளராக இவர் பணி புரிந்தபோது, அங்கு 'கூடைப்பந்து' விளையாட்டை அறிமுகப்படுத்தினார். விரைவில் இந்த விளையாட்டு பல பல்கலைக்கழகங்களில் பிரபலமானது. 1904ம் ஆண்டு அமெரிக்காவின் மிசூரி நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின்போது, இந்த விளையாட்டு ஒரு காட்சி விளையாட்டாக இடம்பெற்றது. 1936ம் ஆண்டு பெர்லின் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் 'கூடைப்பந்து' அதிகாரப்பூர்வமான ஒரு போட்டியாக விளையாடப்பட்டது.
தான் உருவாக்கிய விளையாட்டு, ஒரு ஒலிம்பிக் போட்டியாக உருவானதை கண்டு மகிழ்ந்த ஜேம்ஸ் நெய்ஸ்மித், 1939ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி, தனது 78வது வயதில் காலமானார்.








All the contents on this site are copyrighted ©.