2011-11-05 14:42:13

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு முன்னால் சென்னையில் எனக்குத் தெரிந்த ஒருவரது திருமணத் திருப்பலிக்குச் சென்றிருந்தேன். என் கணிப்பில் கொஞ்சம் கூடுதலான ஆடம்பரங்களுடன் நடத்தப்பட்டத் திருமணம் அது. வீடியோ மற்றும் புகைப்படக் காமெராக்கள் புடைசூழ நடந்த அந்தத் திருப்பலியில் மறையுரை முடிந்து, திருமண வார்த்தைப்பாடுகள் நிறைவேற்றப்பட்டன. அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த தாலிகட்டும் நேரம் வந்தது. வழக்கமாக மணமகன், கயிற்றால் அல்லது தங்கச்சங்கிலியால் செய்யப்பட்ட தாலியை மணமகள் கழுத்தைச்சுற்றி கட்டுவார். அன்று நான் பார்த்த அந்தத் தாலி வித்தியாசமாக இருந்தது. தங்கச் சங்கிலியால் ஆன அந்தத் தாலியைப் பிரித்து கோர்க்கும் வசதிகள் இல்லை. பெண்ணின் தலை வழியாக மாப்பிள்ளை அந்தத் தாலியைப் பெண்ணின் கழுத்தில் மாட்டிவிட வேண்டும். அங்குதான் ஆரம்பமானது பிரச்சனை.
சாதாரணமான ஒரு சூழலில், தலைவழியே மாட்டப்படும் அளவில் அந்தத் தாலி செய்யப்பட்டிருந்தது. ஆனால், திருமணத் திருப்பலிக்கு மணப்பெண் பலவித தலை அலங்காரங்களுடன் வந்திருந்ததால், தலை வழியே தாலியை மாட்ட முடியவில்லை. எனவே, மணப்பெண் ஒரு தனி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவர் தலையில் சேர்க்கப்பட்டிருந்த பல செயற்கை அலங்காரங்கள், மலர் அலங்காரங்கள் எல்லாமே அகற்றப்பட்டு, அவர் மீண்டும் பீடத்திற்கு அழைத்து வரப்பட்டார். எளியதொரு தோற்றத்தில் இப்போது பீடத்திற்கு வந்திருந்த மணப்பெண்ணின் தலை வழியாக தாலியை மாப்பிள்ளை மாட்டினார். இந்தப் பிரச்சனைத் தீர்வதற்கு பத்து நிமிடங்களுக்கு மேல் ஆயிற்று.
வேறொரு திருமணத்தில் எல்லா ஏற்பாடுகளும் சிறப்பாக நடைபெற்றதாகவும், தாலி கட்டும் நேரத்தில், தாங்கள் தாலியைக் கொண்டு வரவில்லை என்று அவர்கள் உணர்ந்ததாகவும் ஒரு சம்பவத்தைக் கேள்விப்பட்டேன். எவ்வளவுதான் திட்டங்கள் தீட்டப்பட்டு, முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு திருமணங்கள் நடைபெற்றாலும், எதிர்பாராத பிரச்சனைகள் ஒவ்வொரு திருமணத்திலும் தலைதூக்குவதைப் பார்க்கிறோம். "விழிப்பாயிருங்கள்" என்று இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுகிறார். இதையும், ஒரு திருமண வைபவத்தை மையப்படுத்தி அவர் சொல்லும் உவமையின் இறுதியில் இந்த எச்சரிக்கையைத் தருகிறார்.

திருவழிபாட்டின் இறுதி வாரங்களில் இருக்கிறோம். திருவருகைக் காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். நமக்கு, இந்த ஞாயிறன்றும், அடுத்த ஞாயிறன்றும் இரு அழகான உவமைகள் தரப்பட்டுள்ளன. இந்த வாரம் பத்துத் தோழியர் உவமையும், அடுத்த வாரம் தாலந்து உவமையும் சொல்லப்பட்டுள்ளன. இன்றைய உவமையில் சொல்லப்படும் பத்துத் தோழியரில் ஐந்து பேர் முன்மதி உடையவர்கள், மற்ற ஐந்து பேர் அறிவிலிகள். மணமகளின் தோழியாக இருப்பதற்கு அழைப்பு வந்ததும், இந்த ஐந்து அறிவிலிகள் என்ன செய்திருப்பார்கள் என்று நான் இப்படி கற்பனை செய்து பார்க்கிறேன். இந்த ஐவரும் தலைகால் புரியாத மகிழ்ச்சி. அடைந்திருப்பார்கள். உடனே, அவர்கள் என்னென்ன செய்யவேண்டும் என்று திட்டமிட்டு, பட்டியல் ஒன்றை தயாரித்திருப்பார்கள்.
அவர்கள் அணிந்து செல்லும் உடை, நகைகள், அவைகளுக்குப் பொருத்தமாக வாங்க வேண்டிய காலணிகள் என்று தங்கள் தோற்றத்தைப் பற்றி ஒரு பட்டியல் தாயாரித்திருப்பார்கள். அதேபோல் அவர்கள் எடுத்துச் செல்லும் விளக்கு எப்படிப்பட்டதாய் இருக்க வேண்டும் அந்த விளக்கைச் சுற்றி எத்தனை மலர்கள் வைக்கப்பட வேண்டும் என்றெல்லாம் அவர்கள் எண்ணிப் பார்த்திருப்பார்கள். அவர்கள் எண்ணத்தில் ஓடிய அந்தப் பட்டியலில் ஒரு முக்கியமான அம்சம் மறக்கப்பட்டது. எண்ணெய்... முன்மதியுடைய ஐந்து பெண்களும் திட்டமிட்டு, பட்டியல் ஒன்றை தயாரித்திருப்பார்கள். அவர்கள் பட்டியலில் 'விளக்கு எறிவதற்குத் தேவையான எண்ணெய் எடுத்துக்கொள்ள வேண்டும்' என்பது முதலாவதாகக் குறிக்கப்பட்டிருக்கும். அவசியங்களா? ஆடம்பரங்களா? எதற்கு முதலிடம் கொடுக்கிறோம் என்பதைச் சிந்திக்க இந்த உவமை உதவுகிறது.
இந்த உவமையை இன்னும் சிறிது ஆழமாக அலசுகையில், மற்றொரு அம்சமும் தெளிவாகிறது. மணமகன் வருவதற்கு காலம் தாழ்த்தப்பட்டது என்று உவமையில் சொல்லப்பட்டுள்ளது. அந்த நேரத்திலாவது இந்த ஐந்து பெண்களின் எண்ண ஓட்டம் அலங்காரங்களிலிருந்து விடுபட்டு, அவசியத் தேவையான எண்ணெய் பக்கம் திரும்பியிருந்தால், தவறை இவர்கள் சரி செய்திருக்கலாம். அலங்காரங்களும், அதனால் உருவான சோர்வும் இவர்களை ஆக்ரமித்ததால், அவசியமான எண்ணெயை இவர்களால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. இந்தக் கவனக்குறைவால், இவர்கள் பங்கேற்க வந்திருந்த திருமண விழாவையே இழக்க வேண்டியிருந்தது.

அவசியமற்றவைகளில் அதிக கவனம் செலுத்திவிட்டு, அவசியமானவைகளை மறந்து விட்டால் வாழ்வில் முக்கியமானவைகளை இழக்க வேண்டியிருக்கும். இதற்கு 1988ம் ஆண்டு வெளிவந்த ஒரு செய்தி நல்லதொரு எடுத்துக்காட்டு. இது ஓர் எச்சரிக்கையும் கூட.
வீடியோப் படங்கள் எடுப்பதில் சிறந்த Ivan Lester McGuire என்ற 35 வயது கலைஞரின் மரணம் பற்றிய செய்தி 1988ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ம் தேதி வெளியானது. பறக்கும் விமானத்திலிருந்து ஒரு குழுவாகக் குதித்து, கைகளைக் கோர்த்து, வானில் சாகசங்கள் புரிவோரைப் பற்றிய செய்தி இது. Sky Diving என்று அழைக்கப்படும் இந்த சாகசத்தில் ஈடுபடும் இவர்கள் பறக்கும் விமானத்திலிருந்து குதிப்பார்கள். விண்வெளியில், ஒரு சங்கிலித்தொடராக கரங்களைப் பற்றியபடி அந்தரத்தில் இக்குழுவினர் பல வடிவங்களை அமைத்துக் காட்டுவார்கள். பின்னர் பூமியை நெருங்கும் வேளையில், தங்கள் இடையில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு விசையைத் தட்டுவார்கள். உடனே, அவர்களுடன் இணைக்கப்பட்ட ஒரு 'பாரச்சூட்' விரியும். அவர்கள் அனைவரும் பத்திரமாகத் தரையிறங்குவர். இந்த சாகசங்களைப் பதிவு செய்வதற்கு வீடியோ படக்கலைஞர் ஒருவரும் இக்குழுவுடன் விமானத்திலிருந்து குதிப்பார். 1988ம் ஆண்டு நடந்த இச்சாகசத்தின்போது, 10,500 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்திலிருந்து ஒவ்வொருவரும் குதிப்பது காண்பிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் கைகோர்த்து ஒரு வட்டம் அமைப்பது வரை ஒழுங்காகக் காட்டப்பட்ட அந்த வீடியோ படம், திடீரென புரண்டு, தாறுமாறாக ஓடியது. சிறிது நேரத்தில் திரையில் ஒன்றும் இல்லை.
நடந்தது இதுதான். வீரர்கள் குதிப்பதை விமானத்திலிருந்தபடியே படம் பிடித்த வீடியோ கலைஞர் McGuire, இறுதியாக தானும் விமானத்திலிருந்து குதித்தார். வீடியோ எடுப்பதிலேயே கவனமாய் இருந்த அவர், தான் 'பாரச்சூட்' அணியவில்லை என்பதை உணராமல் குதித்துவிட்டார். வானில் நடைபெறும் இந்த சாகசகங்களை 800 முறைகளுக்கும் மேல் வீடியோ படம் எடுத்து புகழ்பெற்றவர் Ivan Lester McGuire. அன்று 'பாரச்சூட்' இல்லாமல் குதித்ததால், தன் வாழ்வை இழந்தார்.

பல வேளைகளில் தேவை என்று நாம் இறுக்கமாகப் பற்றிக் கொண்டிருப்பவை தேவையற்றவையாகவும், தேவையற்றதென ஒதுக்குவது தேவையுள்ளதாகவும் மாறும் விந்தையும் நம் வாழ்வில் நடக்கும். முக்கியமாக, மரணம் நமக்கு முன் அமர்ந்திருக்கும்போது, நமது உண்மையான தேவைகள் என்னென்ன என்பதைப் பற்றி நாம் அனைவருமே ஞான உதயம் பெறுவோம். ஆனால், அதுவரை காத்திருக்க வேண்டுமா?

உலகத்தில் எதுவும் இதனை மூழ்கடிக்க முடியாது என்று சூளுரைத்துப் புறப்பட்ட Titanic கப்பல் தன் முதல் பயணத்திலேயே பனிப் பாறையில் மோதி மூழ்கியது. இதில் பயணம் செய்தவர்களில் பலர் கோடீஸ்வரர்கள். மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்த இவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி, இவர்கள் பெற்ற ஞான உதயங்களைப் பற்றி கதைகள் பல சொல்லப்பட்டுள்ளன. அந்தக் கதைகளில் இதுவும் ஒன்று.
மூழ்கும் கப்பலில் இருந்து மக்களைக் காப்பாற்ற உயிர்காக்கும் படகுகளில் பயணிகள் ஏற்றப்பட்டனர். அவர்களில் ஒரு பெண் எதையோ எடுத்து வருவதற்காக தனது அறைக்கு மீண்டும் ஓடிச்சென்றார். வழியில் பணமும், நகைகளும் நிரம்பிய பல பைகள் தண்ணீரில் மிதந்ததைக் கண்டார். அவரது அறையிலேயே, திறந்திருந்த பீரோவில் அவரது வைர நகைகள் மின்னின. ஆனால், இவை எதுவும் அவர் கவனத்தை ஈர்க்கவில்லை. அவர் கவனம் எல்லாம் ஒரு சிறு அட்டைப் பெட்டியில் இருந்த ஒரு சில ஆரஞ்சு பழங்கள் மீது இருந்தது. அவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு அவர் மீண்டும் அந்த உயிர்காக்கும் படகில் ஏறினார்.
ஓரிரு மணி நேரங்களுக்குமுன், கப்பல் நல்ல முறையில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, பணம், நகை இவைகளையெல்லாம் விட்டுவிட்டு அவர் இந்தப் பழங்களைத் தேடியிருப்பாரா? தன் வைரநகைகளைவிட ஆரஞ்சு பழங்கள் அவசியமானவை என்று அவர் சொல்லியிருந்தால், அவரைப் 'பைத்தியம்' என்று மற்றவர்கள் முத்திரை குத்தியிருப்பார்கள். ஆனால், கப்பல் மூழ்கும் வேளையில், மரணம் தங்களை நெருங்கியுள்ளது என்பதை உணர்ந்த வேளையில், வாழ்வின் அவசியங்கள் என்று அவர்கள் எண்ணி வந்த பட்டியலில் பல எதிர்பாராத மாற்றங்கள் நிகழ்ந்தன.

தேவைகள், தேவையில்லாதவைகள், அவசியமானவைகள், அவசியமற்றவைகள், அலங்காரங்கள், ஆடம்பரங்கள் என்று நம் வாழ்வை நிறைத்துவிடும் பல அம்சங்களில் தேவைகளை, அவசியமானவைகளைப் பிரித்துப்பார்க்கும் பக்குவம், கண்ணோட்டம் நம் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்று ஒருவர் ஒருவருக்காக வேண்டிக் கொள்வோம்.
“தற்போது நான் அதிகம் 'பிசி'யாக இருக்கிறேன். பல முக்கியமான அலுவல்கள் உள்ளன. இந்தப் பாகுபாடுகளைச் சிந்திக்க எனக்கு நேரமும் இல்லை, மன நிலையம் இல்லை. வாழ்வின் இறுதி காலத்தில், மரணம் நெருங்கும் வேளையில் இந்த வேறுபாடுகளையெல்லாம் சிந்தித்துக் கொள்ளலாம்” என்று நமக்கு நாமே சொல்லிக் கொண்டால், இயேசு இன்றைய நற்செய்தியில் கூறும் இறுதி வரிகள் நம்மைக் காப்பாற்ற வேண்டும்: விழிப்பாயிருங்கள்; ஏனெனில் இறைவன் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது. மத்தேயு நற்செய்தி 25: 13








All the contents on this site are copyrighted ©.