2011-11-04 15:30:35

உரோமிலுள்ள திருப்பீடத்துக்கானத் தனது தூதரகத்தை மூடுவதற்கு அயர்லாந்து முடிவு செய்துள்ளது குறித்து தலத் திருச்சபை கவலை


நவ.04,2011. அயர்லாந்து அரசின் இத்தீர்மானத்தைக் குறை கூறியுள்ள அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர் கர்தினால் Sean Brady, இத்தீர்மானம் தனக்கு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது என்று கூறினார்.
அயர்லாந்தின் இத்தீர்மானம் விரைவில் மறுபரிசீலனை செய்யப்படும் எனவும், திருச்சபைக்கும் அரசுக்கும் இடையே அடுத்து இடம் பெறவுள்ள உரையாடல் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் எனவும் தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.
கத்தோலிக்க நாடான அயர்லாந்துக்கும் திருப்பீடத்துக்கும் இடையே தூதரக உறவு 1929ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. அச்சமயம், அமெரிக்க ஐக்கிய நாடு, பிரிட்டன், ஐக்கிய நாடுகள் நிறுவனம் ஆகியவற்றுடன் மட்டுமே அயர்லாந்து தூதரக உறவைக் கொண்டிருந்தது.
மேலும், ஈரான், Timor Leste ஆகிய இரண்டு நாடுகளிலும் தனது தூதரகங்களை மூடுவதற்கு முடிவு செய்துள்ளது அயர்லாந்து. இதன்மூலம் ஆண்டுக்கு 12 இலட்சத்து ஐம்பதாயிரம் யூரோ பணத்தைச் சேமிக்க முடியும் என்றும் அந்நாடு கூறியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.