2011-11-04 15:34:04

Sao Paulo பங்குத்தளங்கள் 271 துப்பாக்கிகளைச் சேகரித்துள்ளன


நவ.04,2011. கடந்த அக்டோபரில் கடைப்பிடிக்கப்பட்ட “உலக ஆயுதக் களைவு வாரத்தின்” ஒரு கட்டமாக, பிரேசில் நாட்டு Sao Paulo நகரின் 19 கத்தோலிக்கப் பங்குத்தளங்கள் 271 துப்பாக்கிகளையும் வெடிகுண்டுகளையும் சேகரித்துள்ளது என்று சி.என்.எஸ் செய்தி நிறுவனம் கூறியது.
Sao Paulo நகரத் தெருக்களில் காணப்படும் ஆயுதப் புழக்கத்தைத் தவிர்க்கும் நோக்கத்தில், அந்நகரின் ஓர் அமைதிக்கான நிறுவனம் பல்வேறு சமயக் குழுக்களின் ஒத்துழைப்போடு ஆயுதங்களைச் சேகரிக்கும் நடவடிக்கையைத் தொடங்கியது.
கத்தோலிக்கம், இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவம், புத்தம், யூதம் ஆகிய மதங்களின் வழிபாட்டுத் தலங்களில் சுமார் மூன்று நாட்கள், மக்கள் தங்கள் ஆயுதங்களைக் கொண்டு வந்து கொடுத்தனர் என்று அச்செய்தி நிறுவனம் மேலும் கூறியது.
இந்நடவடிக்கை குறித்து அறிக்கை வெளியிட்ட Sao Paulo கர்தினால் Odilio Pedro Scherer, சிறாரை வன்முறைக்கு உட்படுத்தும் பழக்கங்களைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படுமாறு அழைப்பு விடுத்தார்.
Sao Paulo நகரில், 2010ம் ஆண்டில் இடம் பெற்ற 1,189 கொலைகளில் சுமார் மூன்றில் இரண்டு பகுதிக் கொலைகள் துப்பாக்கிச் சூட்டினால் இடம் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.