2011-11-03 14:52:12

தென்கொரிய மக்கள் கத்தோலிக்கக் கொள்கைகள் மீது உயர்ந்த நம்பிக்கை கொண்டுள்ளனர்


நவ.03,2011. தென்கொரியாவின் பெரும்பாலான மக்கள் கத்தோலிக்கக் கொள்கைகள் மீது உயர்ந்த நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று அந்நாட்டில் வெளியான ஓர் அறிக்கை கூறுகிறது.
புத்த மதமும், சமுதாயமும் என்ற தலைப்பில் Jogye Order’s Institute என்ற நிறுவனம் அந்நாட்டில் மேற்கொண்ட ஓர் ஆய்வின் முடிவுகள் இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டபோது, பொதுவாக, அந்நாட்டு மக்களிடையே மத நம்பிக்கை குறைந்து வந்தாலும், கிறிஸ்தவ கொள்கைகள் மீது தனி மதிப்பு உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
16 வயதுக்கும் 69 வயதுக்கும் இடைப்பட்ட 1500 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்படி, கொரியாவில் பின்பற்றப்படும் பல மதங்களில் கத்தோலிக்க மதம் மிக உயர்ந்த இடத்தையும், அதற்கு அடுத்தபடியாக புத்தமதக் கொள்கைகள் அதிக மதிப்பையும் பெற்றுள்ளன.
பொதுவாகவே, மதநிறுவனங்கள் மீது குறைவான மதிப்பு கொண்டுள்ள இம்மக்களிடையே, அரசுநிறுவனங்கள், ஊடகத்துறை, மற்றும் பொருளாதார நிறுவனங்கள் இன்னும் தாழ்ந்த இடங்களையே பிடித்துள்ளன என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
1970 மற்றும் 80களில் தென் கொரியா மக்களாட்சியில் நிலைப்பதற்கு போராடி வந்த வேளையில், மறைந்த கர்தினால் Stephen Kim Sou-hwan மற்றும் கத்தோலிக்க குருக்கள் கழகத்தைச் சார்ந்தவர்கள் மக்களுக்குப் பல வழிகளில் உதவிகள் செய்ததே, இம்மக்கள் மத்தியில் கத்தோலிக்கக் கொள்கைகளுக்கு உயர்ந்த மதிப்பைப் பெற்றுத் தந்துள்ளது என்று மதம் மற்றும் அமைதிக்காக உருவாக்கப்பட்டுள்ள கொரிய அவையின் முன்னாள் தலைமைச் செயலர் James Byun Jin-heung கூறினார்.








All the contents on this site are copyrighted ©.