2011-11-03 14:51:10

இறைபதம் சேர்ந்த கர்தினால்கள் மற்றும் ஆயர்களுக்கென ஒப்புக்கொடுக்கப்பட்ட திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை


நவ.03,2011. கடந்த 12 மாதங்களில் இறைபதம் சேர்ந்த கர்தினால்கள் மற்றும் ஆயர்களுக்கென இவ்வியாழனன்று வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், 'திருமுழுக்கினால் கிறிஸ்துவோடு இணந்திருக்கும் நாம் அனைவரும் அவருடைய சாவிலும் அவரோடு இணைந்திருக்கிறோம்' என்ற தூய பவுலின் வார்த்தைகளை மையமாக வைத்து மறையுரை வழங்கினார்.
தான் கொல்லப்படப் போவது குறித்து இயேசு கிறிஸ்து எடுத்துரைத்தபோது, அதற்கான விளக்கம் கேட்கவே சீடர்கள் அஞ்சியதை சுட்டிக்காட்டியபாப்பிறை, நம் மனிதஇயல்பில் மரணம் கண்டு அஞ்சுவதே நம்மில் பெரும்பாலும் இடம்பெறுகிறது என்றார்.
நான் பெறவேண்டியதிருமுழுக்கு ஒன்று உள்ளது எனகிறிஸ்து தன் பாடுகளைக் குறித்து எடுத்துரைத்ததையும் சுட்டிக்காட்டியபாப்பிறை, இயேசு கிறிஸ்துவின் இறப்பில் இறைவன் தன் அன்பு முழுமையையும் ஒரு நீர்வீழ்ச்சி போல் பொழிந்துள்ளார் என்றார்.
இறை பிரசன்னத்தில் நாம் தொடர்ந்து வாழமுடியும் என்பது கிறிஸ்துவில் மட்டுமே தன் உண்மை நிலையை அடைய முடியும், ஏனெனில் புதிய மற்றும் நிலைத்த வாழ்வு என்பது சிலுவை மரத்தின் கனி எனவும் எடுத்துரைத்தார் பாப்பிறை.
இயேசுவின் சிலுவை இல்லையேல், பாவத்தின் எதிர்மறை விளைவுகளின் முன்னால் இயற்கையின் அனைத்து சக்திகளும் பலமற்றவைகளாகவே மாறுகின்றன என்பதையும் சுட்டிக்காட்டிய பாப்பிறை, அனைத்தையும் இயங்க வைப்பது இயேசுவின் இதயத்திலிருந்து பிறக்கும் அன்பே என்பதையும் எடுத்துரைத்தார்.
கடந்த 12 மாதங்களில் உயிரிழந்த கர்தினால்கள் மற்றும் ஆயர்களுக்கான இத்திருப்பலியில், இவ்வாண்டு உயிரிழந்த இந்திய கர்தினால் வர்கி வித்யாத்தில் உட்பட பத்து கர்தினால்களின் பெயர்களையும் எடுத்துரைத்து, திருத்தந்தை செபித்தார்.








All the contents on this site are copyrighted ©.