2011-11-02 15:40:06

நேபாளத்தில் அரசியல் கட்சிகளுக்கும் மாவோயிஸ்ட் புரட்சிக்குழுக்களுக்கும் இடையே உருவாகியுள்ள அமைதி ஒப்பந்தம்


நவ.02,2011. நேபாளத்தில் அரசியல் கட்சிகளுக்கும் மாவோயிஸ்ட் புரட்சிக்குழுக்களுக்கும் இடையே இச்செவ்வாயன்று உருவாகியுள்ள அமைதி ஒப்பந்தம் அந்நாட்டு மக்களிடையே நம்பிக்கையை அளித்துள்ளது.
ஆறு ஆண்டுகளாக உருவாகி வந்த இந்த அமைதி உடன்படிக்கையினால், அங்கு செயலாற்றிவரும் 19000க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட் புரட்சி வீரர்கள் அந்நாட்டின் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்று சொல்லப்படுகிறது. மாவோயிஸ்ட் குழுக்கள் பறித்து வைத்துள்ள பல்வேறு நிலங்கள் மற்றும் சொத்துக்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த அமைதி உடன்படிக்கையால் நாட்டில் முழு அமைதி திரும்பும் என்றும், நாடு முன்னேற்றப் பாதையில் செல்லும் என்றும் மக்கள் தங்கள் நம்பிக்கையைத் தெரிவித்துள்ளனர்.
இந்த உடன்படிக்கையின் முழு வடிவமும் வெளிவர இன்னும் ஓரிரு நாட்கள் உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிய ஆயர் Anthony Sharma, இவ்விரு தரப்பினரும் எடுத்துள்ள முடிவுகளில் உறுதியாக நிலைத்துள்ளனரா என்பதை காத்திருந்து பார்க்க வேண்டும் என்று கூறினார்.








All the contents on this site are copyrighted ©.