2011-11-02 15:40:33

உலகப் பொருளாதாரச் சீர்குலைவுக்கு எதிரான போராட்டத்தைக் குறித்து Canterbury பேராயரின் கட்டுரை


நவ.02,2011. ‘இலண்டன் பங்குசந்தையை ஆக்கிரமிப்போம்’ என்ற அறைகூவலுடன் புனித பவுல் பேராலய வளாகத்தில் கடந்த சில நாட்களாகக் கூடியிருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களை பலவந்தமாக வெளியேற்றுவதில்லை என்று பேராலய நிர்வாகமும், இலண்டன் நகராட்சியும் இச்செவ்வாயன்று தீர்மானித்துள்ளன.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அழைப்பின் பேரில் அண்மையில் அசிசி நகரில் நடைபெற்ற பல்சமய அமைதி கூட்டத்திற்குச் சென்று திரும்பியுள்ள Canterbury பேராயர் ரோவன் வில்லியம்ஸ், உலகப் பொருளாதாரச் சீர்குலைவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தைக் குறித்து எழுதியுள்ள ஒரு கட்டுரை, இலண்டனில் வெளியாகும் Financial Times என்ற நாளிதழில் இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளது.
சமுதாயத்தின் அடிப்படை விழுமியங்கள் கேள்விக்குரியதாக மாறும்போது, மக்கள் மேற்கொள்ளும் பல போராட்டங்கள் அண்மைக் காலங்களில் புனித பவுல் பேராலய வளாகத்தில் நடைபெற்றுள்ளன. உலகில் நிலவும் தவறான பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக இப்போது நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில் பலரும் கலந்து கொண்டு வருவது, இன்றைய உலகில் எளிய மக்களிடையே வளர்ந்து வரும் ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறதென்று பேராயர் வில்லியம்ஸ் கூறினார்.
மக்களிடையே இந்த ஏமாற்றத்தை உருவாகியுள்ள நமது நிதி நிறுவனங்கள் எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல், தொடர்ந்து தங்கள் சுயநலப் போக்குகளில் செல்வது வேதனையைத் தருகிரதென்று பேராயர் வில்லியம்ஸ் இக்கட்டுரையில் மேலும் கூறியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.