2011-11-01 15:12:52

விவிலியத்தேடல்


RealAudioMP3 திருப்பாடல் 90 பாகம் 3
துறவி ஒருவர் இருந்தார். அவர் தன்னை நாடிவரும் மக்களின் வாழ்க்கைக்கு ஏற்ற நல்ல கருத்துகளைச் சொல்லிக் கொடுத்தார். எனவே மக்கள் அவரை ஆகா ஓகோவென புகழ்ந்தனர். இது அந்நாட்டின் அரசர் காதிற்கு எட்டியது. அத்துறவியைப் பார்க்க ஆவல்; கொண்டு அரண்மனைக்கு அழைத்து வரச்செய்தார். அரண்மனைக்கு வந்த துறவிக்கு நல்ல வரவேற்பு அளித்து அரண்மனையிலேயே தங்க வேண்டும் எனவும், தன் வாழ்க்கைக்குத் தேவையான நல்ல கருத்தைச் சொல்ல வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார் அரசர். அதை ஏற்றுக்கொண்ட துறவி, அங்கு தங்கி சகல வசதிகளையும் அனுபவித்ததோடு நன்கு உண்டு உறங்கி வந்தார். ஒரு வாரம், ஒரு மாதம் என நாட்கள் உருண்டோடின. தன் வாழ்க்கைக்குத் தேவையான கருத்து எதையும் சொல்லாமல் கிடைத்தது போதும் என நன்கு உண்டு, உறங்கி வருகிறார் துறவி என்ற தனது எண்ணத்தை ஒரு நாள் துறவி காதில் விழும்படியே அரசர் பேசினார். ஆனாலும் எந்தப் பலனும் இல்லை. அடுத்த நாள் அரசர் கழுத்தில் இருந்த அரசவம்சத்து பவள மாலையைப் பறித்துக் கொண்டு, துறவி சிட்டெனப்பறந்தார். அதிர்ச்சியுற்ற அரசர் தன் வீரர்களுடன் அவரைத் துரத்தினார். பவள மாலையுடன் ஓடிய துறவி நாட்டின் எல்லையிலிருந்த தனது குடிசைக்கு வந்ததும் தானாகவே நின்றார். பவள மாலையை மன்னரிடம் தந்துவிட்டு, “இதை நீ பிறக்கும் போது கொண்டு வந்தாயா? அல்லது இறக்கும் போது எடுத்துச் செல்லப்போகிறாயா? இவ்வுலகில் எதுவுமே நிரந்திரமில்லை. உன் உயிரும் நீ ஆண்டுகொண்டிருக்கிற இந்நாடும் கூட உனக்கு சொந்தமில்லை, நிரந்திரமில்லை. இதுதான் நீ அறிந்து பின்பற்ற வேண்டியது” என்று சொல்லிவிட்டு தன் குடிசைக்குள் நுழைந்தார். உடனே அரசர் துறவிக்கு நன்றி சொல்லிவிட்டு அரண்மனையிலே வந்து தங்கக் கேட்டுக்கொண்டார். ஆனால் துறவி, “கடந்த மாதம் முழுவதும் அரண்மனையில் இருந்தேன் எல்லாம் கிடைத்தது. அனுபவித்தேன். இறைவன் கொடுத்ததை இருந்தபோது அனுபவித்தேன். இங்கு எந்த வசதியும் இல்லை. இருப்பினும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறேன். அந்த வசதிகள் இல்லாமல் என்னால் வாழமுடியாதா என்ன? இவ்வுலகில் எதுவுமே நிரந்தரமில்லை” என்றார்.

அன்பார்ந்தவர்களே! நாம் இன்றும் சிந்திப்பது 90வது திருப்பாடல். 90வது திருப்பாடல் என்றாலே அது மனிதர்களின் நிலையாமை பற்றியும் இறைவனின் நிரந்தரம் பற்றியும் சொல்வது என்பது விவிலிய ஆசிரியர்களின் கருத்து. எனவே இன்று மனித வாழ்வின் நிலையாமை பற்றியும், இந்நிலையில்லா வாழ்வில் நாம் எப்படி வாழ்கிறோம் எனவும் சிந்திப்போம்.

திருவிவிலியத்தின் முதல் நூலான தொடக்கநூலில் மனிதர்களின் வாழ்நாள் ஆயிரம் ஆண்டுகளை ஒட்டி இருந்தாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 969 ஆண்டுகள் வாழ்ந்த மெதுசெலா என்பவர்தான் உலகத்தில் அதிக நாட்கள் வாழ்ந்த மனிதர் என விவிலியத்திலிருந்து நாம் தெரிந்து கொள்கிறோம். ஆனால் இத்திருப்பாடல் எழுதப்பட்ட காலத்தில் மனிதனின் வாழ்நாள் 70லிருந்து 80 எனக் குறைந்திருந்தது. கானான் நாட்டை நோக்கிய பயணத்தில் 15,000 பேர் இறந்து அடக்கம் செய்யப் பட்டதாகக் கூறப்படுகிறது. தங்கள் முன்னோர்கள் வாழ்நாளை தங்கள் வாழ்நாளோடு ஒப்பிட்டு தங்கள் வாழ்நாள் வெகுவாகக் குறைந்திருப்பதாக வேதனைப்படுகின்றனர். அதைத்தான் இத்திருப்பாடலின் 4, 5 மற்றும் 6ம் சொற்றொடர்கள் இவ்வாறு சொல்கின்றன.
ஏனெனில் ஆயிரம் ஆண்டுகள் உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன.
வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்;
அது காலையில் தளிர்த்துப் பத்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்து போகும்.

தமிழகத் திருச்சபையில் பட்டிதொட்டிகளிலெல்லாம் எதிரொலித்த பாடல் 'நீயே நிரந்தரம்'. இந்தப் பாடல் புதிய கருத்து ஒன்றையும் சொல்லவில்லை. மாறாக நமக்கு நன்கு தெரிந்த இவ்வுலகத்தின் நிலையாமை பற்றியும் இறைவன் மட்டுமே நிரந்தரம் என்பதையும் கவித்துவம் கலந்த இசையோடு தந்தது. எனவே மனித வாழ்வின் நிலையாமையைப் பற்றி அறியாத மனிதர் எவரும் இருக்க முடியாது. இருந்தாலும் கூட இவ்வுலக வாழ்வு நிலையானது என்பதைப் போலத்தான் இன்றைய மனித வாழ்வு இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று கௌதம புத்தர் சொன்னார். இது நம் எல்லோருமே நன்கு தெரிந்த ஒரு கருத்து. ஆசைதான் துன்பத்திற்கு காரணம் என்பது உண்மைதான் என்பது எல்லோருமே ஏற்றுக்கொள்கின்ற கருத்து. இருப்பினும் கூட அந்த ஆசை நமக்கும் வருகிறது என யாருமே ஏற்றுக்கொள்வதில்லை. நமக்கு வருவதெல்லாம் சும்மா சின்ன சின்ன ஆசைதான். அவை நம் துன்பத்திற்கு காரணமான ஆசையல்ல என அலட்சியமாக இருக்கிறோம். முதலில் மனிதர்களாகிய நமக்கு ஆசை பிறக்கின்றது. அது சின்ன ஆசைதான். ஆசைப்பட்டதை அடைய முயற்சிக்கிறோம். அதை அடைந்ததும் மகிழ்ச்சியடைகின்றோம். அதைப் பயன்படுத்துகின்றோம். நீண்ட பயன்பாட்டிற்கு பிறகு அது இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைக்கு ஆளாகி விடுகிறோம். எனவே அதை இழக்காமல் இருக்க எல்லாவிதமான முயற்சியும் எடுக்கிறோம். எனினும் அதை இழந்துவிட்டால் நம்மால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

அன்பார்ந்தவர்களே! இதை ஓர் உதாரணத்தோடு கூறும்போது இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். நமது தமிழகத்தை எடுத்துக் கொள்வோம். இன்று தங்கத்தின் விலை நிலவரம் என்பது மிக முக்கியச் செய்தியாக உருவெடுத்திருக்கிறது. எனவே தங்கத்தையே உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். உண்பதற்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை ஒரு துளி தங்கமாவது உடம்பில் இருக்க வேண்டும் என்ற ஆசை சர்வசாதாரணமாகிவிட்டது. ஒரு பவுன் தங்கமாவது வாங்கிவிட வேண்டுமென்ற முயற்சியில் ஈடுபடுகின்றவர், அது கிடைத்ததும் மகிழ்ச்சி அடைகின்றனர். அதை பயன்படுத்த ஆரம்பிக்கின்றனர். இன்று தங்கம் என்பது இன்றியமையா பொருளாக, அது இல்லாமல் வாழமுடியாது என்ற நிலை உருவாகியிருப்பதை யாராலும் மறுக்கமுடியாது. அதை இழந்துவிடாமல் இருக்க எதையும் செய்ய தயாராக இருப்பதை தினசரி செய்தித்தாள்கள் நமக்கு சொல்லிக் கொண்டே இருக்கின்றன. தங்கத்தை இழந்ததால் நடக்கும் பயங்கரமானச் செய்திகளும் தெரியாமல் இல்லை.

தங்கம் இல்லையென்றால் வாழமுடியாதா என்ன? வாழ்வதற்கும் தங்கத்திற்கும் என்ன சம்பந்தம்? தங்கம் இல்லையென்றால் வாழமுடியாது என்பது பொய் என நம் எல்லோருக்குமே நன்கு தெரியும். ஆனால் அந்தப் பொய்யைத்தான் நாம் உண்மை என நம்புகிறோம். இவ்வுலக வாழ்வு நிலையில்லாதது என நம் எல்லோருக்குமே நன்கு தெரியும். இருப்பினும் அது மண்ணாக இருக்காலாம் அல்லது பொன்னாக இருக்கலாம் அது நிலையானது என்ற பொய்யான மாயை நம் கண்களை மறைக்கிறது.

நாம் எல்லாருமே துவக்கத்தில் சின்ன ஆசை எனத்தான் ஆரம்பிக்கிறோம். ஆனால் அது ஆணவமாக வளர்ந்து அதை அடைந்தே தீர வேண்டும் என்ற நிலைக்கு வளர்ந்து விடுகிறது. அவ்வாறு ஆணவமாக வளர்ந்து நிற்கும் போது அது ஆணவம் என்று கூட நம்மால் புரிந்து கொள்ள முடியாத நிலையில் நிற்கிறோம் என்பது தான் உண்மை. வெளியில் மூன்றாவது மனிதராக நின்று பார்க்கும் போதுதான் அது சின்ன சின்ன ஆசையில்லை மாறாக அது ஆணவம் என்பதைப் புரிந்துகொள்கிறோம்.

அன்பார்ந்தவர்களே! சிறுவயதிலிருந்தே பெரிய பெரிய பதவிகளை அடைய வேண்டும் என்ற வித்தானது நம்மிலே வளர்கிறது. வளர்ந்து பெரியவர்களானதும் திறமைகளால், உழைப்பால் அல்லது எப்படியாவது பல பதவிகளை பெறுகிறோம். ஆனால் அந்த பதவிகளை இழப்பதற்கு யாருக்கு இலகுவாக இருக்கிறது? வயது முதிர்ந்த பிறகும்கூட அதை விட்டுவிடாமல் பிடித்துக் கொண்டிருக்கும் மனிதர்கள் எத்தனை பேர்? அந்த பதவிகளோடுதான் அவர்கள் பிறந்தார்களா? அல்லது, அந்த பதவிகளோடுதான் போகப்போகிறார்களா?

16ஆம் நூற்;றாண்டில் ஸ்பெயின் நாட்டில் பிரபுக்கள் குடும்பத்திலே செல்வந்தராகப் பிறந்தவர் பிராசிஸ் போர்ஜியா. தனது 33வது வயதிலே பிரபுவானார். எட்டு குழந்தைகளுக்கு தகப்பனான இவர் ஒவ்வொருநாளும் திருப்பலிக்குச் சென்று நற்கருணை உட்கொண்ட நல்ல கத்தோலிக்கர். தனது மனைவியின் இறப்பிற்குப் பிறகு பிரபுத்துவத்தை துறந்து இயேசுசபை குருவானார். பிற்காலத்திலே புனிதராகவும் உயர்த்தப்பட்டார். லொயோலா இஞ்ஞாசியாருக்கு பிறகு அகில உலக இயேசு சபையின் மிகச்சிறந்த தலைவர் என சொல்லப்படுகிறார். நாம் வழக்கமாக இறந்தவர்களின் கைகளையும் மூடிச் சேர்த்து ஒரு செபமாலையை வைத்துத்தான் அடக்கம் செய்வோம். ஆனால் தான் இறந்தபிறது எனது இரு கைகளையும் சேர்த்து வைக்க வேண்டாம். மாறாக திறந்து வைத்து அடக்கம் செய்யுங்கள். ஏனெனில் மனிதர்கள் இறந்தபிறகு எதையும் எடுத்துச்செல்வதில்லை என உணர வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம்.

இன்று இறந்தோர் நினைவு நாள். இறந்தவர்களை நினைவுகூர்கின்ற இன்றைய நாளிலே மனிதர்களின் நிலையாமையைப் பற்றி பேசுவது மிகப்பொருத்தமானது. இந்த நாளிலே கத்தோலிக்கத் திருச்சபை இறந்தவர்களுக்காக செபிக்க அறிவுறுத்துகிறது. இறந்தவர்களுக்காக ஏன் செபிக்க வேண்டும்? என்ற கேள்விக்கு திருவிவிலியம் 2 மக்கபேயர் 12ம் பிரிவு 38-45 முடிய உள்ள சொற்றொடர்கள் பதில் சொல்கின்றன. யூதாவும் அவர் இனத்தாரும் தங்களைக் காத்துக்கொள்ள யாமினியரோடு போரிடுகின்றார்கள். போரில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய தயார்படுத்திக் கொண்டிருக்கும் போது, அவர்களின் சட்டைப்பையில் திருச்சட்டம் தடைசெய்த யாமினிய சிலைகளைக் கண்டனர். எனவே அந்தப் பாவத்தை முற்றிலும் துடைத்தழிக்குமாறு மன்றாட்டில் ஈடுபட்டார்கள்.
2மக்கபேயர் 43 மற்றும் 45வது இறைச் சொற்றொடர்கள்
பின்பு அவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் அவர் பணம் திரட்டி ஆறு கிலோ வெள்ளி சேகரித்து பாவம் போக்கும் பலி ஒப்புக்கொடுக்கும்படி எருசலேமுக்கு அனுப்பிவைத்தார்.
ஆகவே இறந்தவர்கள் தங்கள் பாவத்தினின்று விடுதலை பெறும்படி அவர் அவர்களுக்காகப் பாவம் போக்கும் பலி ஒப்புக்கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து முதல் 10நூற்றாண்டுகளில் பல்வேறு வகைகளில் இறந்தவர்களுக்கு வணக்கம் செலுத்தினார்கள். 11ம் நூற்றாண்டில் பல்வேறு துறவகங்களில் இறந்தோருக்கென நவம்பர் 2ம் நாள் செபிக்க ஆரம்பித்தனர். இந்தப் பழக்கம் சிறிது சிறிதாகப் பரவி கத்தோலிக்கத் திருச்சபை முழுவதும் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

இறப்பு என்பது வருத்தமானதுதான் என்றாலும் மனித வாழ்வு இவ்வளவுதான் என்பதை சரியாகச் சொல்லித்தந்து விடுகிறது. எவ்வளவு சொத்து சேர்த்து வைத்தாலும், இறுதியில் நமக்குத் தேவையானது ஆறு அடி நிலம். இப்போது அந்த ஆறு அடியும் இல்லையென்றாகிக் கொண்டிருக்கிறது. புதைப்பதற்கு இடமில்லை மாறாக சாம்பலை வேண்டுமானால் கரைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லும் நிலை உருவாகி வருகிறது.

அன்பார்ந்தவர்களே! இஸ்ரயேல் மக்கள் இம்மண்ணுலகில் மனிதர்களின் நிலையாமையையும் இறைவனின் நிரந்தரத்தையும் அவர் எல்லாம் வல்லவர் என்பதையும் நன்கு உணர்ந்திருந்தார்கள் நிலையில்லாத இவ்வுலகில் இறைவன் நமக்குக் கொடுப்பதை பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் அவை இல்லாமல் வாழமுடியாது என்ற விளிம்பு நிலைக்குச் செல்வதுதான் தவறு. அதற்கு மாறாக என்றும் நிரந்தரமான இறைவனில் பற்றுக்கொள்வதே சிறந்தது என்பதுதான் இத்திருப்பாடல் நமக்குச் சொல்லும் செய்தி.








All the contents on this site are copyrighted ©.