2011-10-31 14:58:35

வாரம் ஓர் அலசல் - 700 கோடியை எட்டிப் பிடித்துள்ள உலகம்


அக்.31,2011. 2011ம் ஆண்டு அக்டோபர் 31, இத்திங்கள் அதிகாலை 4 மணி, 21 நிமிடங்கள், 10 வினாடிகளுக்கு உலக மக்கள் தொகை 700 கோடியைத் தொட்டது என ஐக்கிய நாடுகள் நிறுவனம் தெரிவித்தது. அதிலும் குறிப்பாக, 700 கோடியாவது குழந்தை இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறக்கும் எனக் கணிக்கப்பட்டது. உலகில் 39 காலநிலைப் பகுதிகள் உள்ளன. உலக மக்கள் தொகை கடிகாரத்தில் எந்தப் பகுதியிலும் இந்த நேரப்படி கணனியில் பார்த்தால் இவ்வெண்ணிக்கை எட்டியிருப்பதைப் பார்க்கலாம் என்று சொல்லப்பட்டது. மனிதன் தோன்றி பல ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன. எனினும், கடந்த 1805ம் ஆண்டில்தான் உலக மக்கள் தொகை 100 கோடியை எட்டியது. ஆனால் அதற்கு 122 ஆண்டுகள் கழித்து அதாவது 1927ம் ஆண்டில்தான் அவ்வெண்ணிக்கை 200 கோடியை எட்டியது. அதன்பிறகு 32 ஆண்டுகள் கழித்து அதாவது 1959ம் ஆண்டில் 300 கோடியையும், பின்னர் 14 ஆண்டுகள் கழித்து அதாவது 1974ம் ஆண்டில் 400 கோடியையும், பின்னர் 13 ஆண்டுகள் கழித்து அதாவது 1987ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி 500 கோடியையும், பின்னர் 12 ஆண்டுகள் கழித்து அதாவது 1999ம் ஆண்டில் 600 கோடியையும் எட்டியது. ஆக, கடந்த 100 ஆண்டுகளில் மட்டும் உலக மக்கள் தொகை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.
இத்திங்களன்று உலக மக்கள் தொகை 700 கோடியை எட்டியது என ஐ.நா.கூறியுள்ளது. ஒவ்வொரு நாளும் சராசரியாக இடம் பெறும் குழந்தை பிறப்பைக் கணக்கில் வைத்து இந்த மதிப்பீட்டைச் செய்துள்ளது ஐ.நா.நிறுவனம். மேலும், 2025ம் ஆண்டில் 800 கோடியாகவும் 2050ம் ஆண்டில் 900 கோடியாகவும், 2100ம் ஆண்டில் 1,000 கோடியாகவும் உலக மக்கள் தொகை அதிகரிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. ஆயினும், ஐ.நா.வின் தற்போதைய கணிப்பை நூறு விழுக்காடு சரியானது எனக் கூற முடியாது என்று சிலர் சொல்கிறார்கள். 2012ம் ஆண்டு பிப்ரவரியில்தான் உலக மக்கள் தொகை 700 கோடியை எட்டும் என அமெரிக்க ஐக்கிய நாட்டுப் புள்ளி விபர அலுவலகம் ஒன்று தெரிவித்துள்ளது.
தற்போது உலக மக்கள் தொகையில் சீனா 19.22 விழுக்காடாகவும், இந்தியா 17.36 விழுக்காடாகவும், அமெரிக்க ஐக்கிய நாடு 4.48 விழுக்காடாகவும் இந்தோனேசியா 3.41 விழுக்காடாகவும் அதன்பின்னர் பிரேசில் என இறங்குவரிசைப் பட்டியல் தொடர்கின்றது. ஆயினும் இந்தியாவின் மக்கள் தொகை, 2030ம் ஆண்டில் சீனாவை மிஞ்சும் எனக் கூறப்படுகின்றது. ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை பிறப்பது அத்தனை பேருக்கும் அளவில்லாத ஆனந்தத்தை அள்ளித் தருகிறது. ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூனும், இன்று உலக மக்கள் தொகை 700 கோடியாக உயர்ந்திருப்பதை ஒரு மைல்கல் என்று குறிப்பிட்டு, அதனை மனித சமுதாயம் கொண்டாட வேண்டும் என்று இந்நாளையொட்டிய தனது செய்தியில் கூறியுள்ளார். அதேநேரம் இந்த எண்ணிக்கை உலகினருக்கு முன்வைக்கும் சவால்களையும் நினைவுபடுத்தியுள்ளார்.
இப்போது இப்பூமிப்பந்தில் வாழும் நாம் ஒவ்வொருவரும் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் வருங்காலத் தலைமுறையைப் பாதிக்கும் என்றும் பான் கி மூன் எச்சரித்துள்ளார். ஒருவர் ஒருவர் மீதும் இந்தப் பூமியின் மீதும் நமக்கிருக்கும் பொறுப்புணர்வை இந்நாள் நினைவுபடுத்துகின்றது. UNFPA என்ற ஐ.நா.வின் மக்கள்தொகை நிதி அமைப்பு, சிறந்ததோர் உலகை உருவாக்குவதற்கு “எழுநூறு கோடித் திட்டங்கள்” என்ற தலைப்பில் ஒரு புது முயற்சியைத் தொடங்கியுள்ளது. பாகுபாட்டினால் துன்புறும் மக்கள் நியாயமாக நடத்தப்படவும், வறுமையையும் சமத்துவமின்மையையும் அகற்றி மக்கள் எல்லாரும் வளமையையும் அமைதியையும் அனுபவிக்கவும், இப்பூமியின் இயற்கை வளங்களைப் பாதுகாத்து அவை எல்லாருக்கும் கிடைக்குமாறு செய்வதற்கும் இந்தச் செயல் திட்டங்கள் மூலம் ஐ.நா. நடவடிக்கை எடுக்கும், இதற்காக அது தளராது உழைக்கும் என்று பான் கி மூன் கூறினார். நம் ஒவ்வொருவருக்கும் போதுமான உணவு இருக்கின்ற போதிலும் இன்றும் சுமார் 120 கோடிப் பேர் பசியால் வாடுகின்றனர். பல நோய்களை ஒழிப்பதற்கு வழிகள் இருந்தும் அவை தொடர்ந்து பரவி வருகின்றன. இயற்கையே தந்த நல்ல வளமான சுற்றுச்சூழல் நமக்குக் கொடையாகக் கொடுக்கப்பட்டு இருந்தாலும் அவற்றை நாம் தினமும் அழித்து வருகிறோம், மனம்போனப் போக்கில் பயன்படுத்தி வருகிறோம். இவ்வுலகில் அனைத்து மக்களின் மனதும் அமைதியைக் கனவு கண்டாலும், உலகின் பெரும் பகுதிகளில் ஆயுதம் தாங்கிய சண்டைகள் நடை பெற்ற வண்ணம் இருக்கின்றன. ஆதலால் நமது 700வது கோடியான குழந்தைக்கும் வருங்காலத் தலைமுறைக்கும் நம்மில் இருக்கும் நல்லதை விட்டுச் செல்ல வேண்டும். நல்லதோர் எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்பது பான் கி மூனின் வேண்டுகோள்.
அன்பு நெஞ்சங்களே, உலகில் ஒருபக்கம் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. மற்றொரு பக்கம் இளையோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. தற்போது 700 கோடியை எட்டியுள்ள உலக மக்கள் தொகையில் 180 கோடிக்கும் மேலானோர் 10 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களில் ஏறக்குறைய 90 விழுக்காடு வளரும் நாடுகளில் உள்ளனர். ஆப்ரிக்க நாடான கென்யாவின் நைரோபியில் 85 விழுக்காட்டினர் 35 வயதுக்குட்பட்டவர்கள். உலகிலே ஜப்பானில்தான் முதியோரின் எண்ணிக்கை அதிகம். எனவே முதியோரைப் பராமரிக்க வேண்டும், அதேநேரம் உலகின் தற்போதைய மற்றும் வருங்காலத் தலைமுறையினர் கல்வியிலும், நலவாழ்விலும் முன்னேறும் அனைத்து வழிகளையும் இவ்வுலகம் கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடிப்பதோடு அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இளையோர் நல்ல முறையில் வளர்ந்தாலே இவ்வுலகம் வளம் பெற முடியும். இவ்வாறு ஐ.நா.வின் மக்கள்தொகை நிதி அமைப்பின் செயல்திட்ட இயக்குனர் முனைவர் Babatunde Osotimehin சொல்கிறார்.
மனித சமுதாயத்தின் எண்ணிக்கை இன்று 700 கோடியாக உயர்ந்து விட்டது என்று நினைக்கையில் மனதில் தோன்றும் எண்ணங்கள் என்ன? மக்கள்தொகை பெருகுகிறதே என்று பயப்படத் தேவையில்லை, கவலைப்பட அவசியமில்லை. பொதுவாக மக்கள் எப்படி வாழ்கிறார்கள்? எங்கே வாழ்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? அவர்கள் இன்று நுகரும் பொருட்கள் என்ன?, மக்கள் நடத்தும் சுரண்டல்கள் என்ன? எங்கு எப்படி எவற்றைச் சுரண்டுகிறார்கள்? மக்களின் பகிர்தல் எந்த அளவில் இருக்கின்றது? அவர்களின் முன்னேற்ற நடவடிக்கைகள் பரந்த அளவில் இருக்கின்றதா? இவை போன்ற சில கேள்விகளைக் கேட்டுப் பார்ப்பது நல்லது. ஒவ்வொருவருமே தனக்குத் தானே இக்கேள்விகளை முன்வைத்து ஓர் ஆன்மப் பரிசோதனையைச் செய்து பார்ப்பதும் நல்லது.
கடந்த வார உலகின் நிலவரத்தைப் பார்ப்போமே. உலகில் இடம் பெறும் ஊழல்களால் ஒவ்வோர் ஆண்டும் நூறாயிரம் கோடி டாலர் இழப்பு என்று உலக வங்கி கணக்கிட்டுள்ளது. உலகில் சுமார் 24 கோடியே 50 இலட்சம் விதவைகள் உள்ளனர். இவர்களில் ஏறத்தாழ பாதிப்பேர் கடும் ஏழ்மையில் வாடுகின்றனர். உலகில் ஒவ்வோர் ஆண்டும் போரில் 55 ஆயிரம் பேர் இறக்கின்றனர். அதேநேரம் வன்முறைக் குற்றங்களால் ஆண்டுதோறும் 5 இலட்சத்து 26 ஆயிரம் பேரும், ஒரு நாளைக்கு 1,400க்கு அதிகமானோரும் பலியாகின்றனர். இவர்களில் நான்கில் மூன்று பகுதியினர் போர் இடம் பெறாத இடங்களில் வாழ்வோர். இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இவர்களில் 26 விழுக்காட்டினர் நன்கு படித்தவர்கள். மேலும், தற்கொலை செய்து கொள்வோரில் பெரும்பாலானோர் திருமணமானவர்கள் என உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. விவசாயிகள் தற்கொலை செய்வதில் மகாராஷ்டிரா மாநிலம் முன்னிலை வகிக்கின்றது. தற்கொலை செய்து கொண்டவர்களில் 41 விழுக்காட்டினர் சுயதொழில் செய்தவர்கள். 2010ம் ஆண்டில் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் பேர் தற்கொலை செய்துள்ளனர். அதே ஆண்டில் சாலை விபத்துகளில் மட்டும் 73 ஆயிரத்து 312 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல, எதிர்பாராத இயற்கைப் பேரிடர்களில் சிக்கி, 3 இலட்சத்து 59 ஆயிரத்து 583 பேர் உயிரிழந்துள்ளனர். ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இவையெல்லாமே கடந்த வாரத்தில் வெளியான செய்திகள். இன்றைய சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகளும் அவற்றினால் ஏற்படும் மனஅழுத்தங்களும் மக்களை இந்த நிலைக்குத் தள்ளுகின்றன. இந்நிலையில், அன்பு வானொலி நேயர்களே, 700வது கோடியாகப் பிறந்துள்ள நமது வருங்காலத் தலைமுறைக்கு எதை விட்டுச் செல்லப் போகிறோம்? நமது வாழ்க்கைமுறை மாற வேண்டாமா?. வாழ்கின்ற வாழ்க்கையை முழுமையாய் வாழ்ந்தால்தான் வரலாற்று ஏட்டில் நமது பெயர்கள் பதிவாகும். அப்போதுதான் வருங்காலமும் நம்மை நினைவுகூரும். பெரிய அளவில் இல்லாவிட்டால்கூட சிறிய அளவிலாவது நம்மை நினைத்துப் பார்க்கும். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த புனித பெனடிக்ட் சொல்கிறார் “தினமும் உனது மரணத்தை கண்முன் நிறுத்து” என்று. நவம்பர் முதல் தேதி திருச்சபை கொண்டாடும் தூயவர்கள் இப்படி வாழ்ந்தவர்கள்தான். அன்றாட வாழ்க்கை மற்றவர்க்குப் பயன்படும் வகையில் இவர்கள் வாழ்ந்தவர்கள். நவம்பர் இரண்டாம் தேதி இம்மண்ணைவிட்டு மறைந்தவர்களை நினைக்கும் போதும் நமக்கும் நமது மரணம்தான் நினைவுக்கு வரவேண்டும். அப்போதுதான் நமது செயல்பாடுகள் சிறந்தவையாக மாறும்.
அந்த இளைஞன் வாழ்வில் ஏற்பட்ட ஒரு பெரிய பிரச்சனையைக் கண்டு வெறுத்துப் போய் அந்தக் குன்றின்மேல் ஏறி நின்று விழப் போனான். அப்போது அவ்வழியாய் வந்த பெரியவர் ஒருவர் அவனிடம் அதற்கானக் காரணத்தைக் கேட்டார். பிறகு அவர், அந்த இளைஞனிடம், “தம்பி இது பெரிய சிக்கல்தான். ஆயினும் எனக்காக ஒரு காரியம் செய். அதோ அங்கே கீழே தெரிகிறதே ஓர் அடர்ந்த காடு. அதை ஒருமுறை சுற்றி வா, அது பெரிய காடு போலத் தெரிகிறது, மூன்று நாட்களாவது ஆகும் என்று கருதுகிறேன், சென்று வா” என அனுப்பி வைத்தார். சரி வருகிறேன் என்று புறப்பட்ட அந்த இளைஞன் அதே நாளில் திரும்பி வந்தான். “என்ன தம்பி, இவ்வளவு சீக்கிரம்” என்று பெரியவர் கேட்க, “இல்லை, இங்கிருந்து பார்க்கத்தான் அது பெரிய காடு போல் தெரிகிறது. அது ஒன்றும் அப்படியில்லை. சுமார் 100 மரங்கள்தான் இருக்கும்” என்றான். பின்னர் அந்தப் பெரியவர், “தம்பி உன் பிரச்சனையும் பார்க்கத்தான் பெரிதாகத் தோன்றுகிறது. அருகே சென்று பார்த்தால் சிறியதாகிவிடும். இதை நீ புரிந்து கொண்டால் சரி, இப்போது நீ சாகலாம்” என்றார்.
அந்த இளைஞன் சாவைக் கைவிட்டு வாழ்வைக் காப்பாற்றிக் கொண்டான்.
ஆம். தெரிவதெல்லாம் புரிவதில்லை. எனவே அன்பர்களே, வாழ்வின் பிரச்சனைகளைப் புரிந்து, அந்த வாழ்வை முழுமையாக வாழ்ந்து வருங்காலத் தலைமுறை வாழ நல்ல பாதை அமைப்போம்.








All the contents on this site are copyrighted ©.