2011-10-31 15:02:25

பிரசில் சமூக வளர்ச்சிப் பணிகளில் திருச்சபையின் பங்களிப்பு குறித்து பாப்பிறை


அக்.31,2011. மனித வாழ்வின் பாதுகாப்பு, குடும்ப மதிப்பீடுகளை ஏற்று நடத்தல், கடுமையான உழைப்பு மற்றும் தாராள மனப்பான்மை போன்ற நல் மதிப்பீடுகளில் பிரசில் சமூகம் வளர தலத்திருச்சபை வழங்கியுள்ள உதவிகள் குறித்து எடுத்துரைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருப்பீடத்திற்கான பிரசில் நாட்டின் புதிய தூதுவர் அல்மிர் ஃபிராங்கோ தெ சபார்பூடா (Almir Franco de SABARBUDA) என்பவரிடமிருந்து நம்பிக்கைச் சான்றிதழ்களைப் பெற்ற நிகழ்வின்போது உரையாற்றிய திருத்தந்தை, 1500ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி அந்நாட்டில் செயல்படத் துவங்கிய திருச்சபை, தன் சாட்சியங்களை அந்நாட்டு கலாச்சரத்திலும், மதக்கட்டிடங்களில் மட்டுமல்லாமல், அம்மக்களின் வாழ்விலும் கொண்டுள்ளது என்றார்.
இன்றைய சமூகத்தில் திருச்சபையின் பணி என்பது மனிதாபிமான மற்றும் கல்விப்பணிகளாக மட்டும் தொடர்வதில்லை, மாறாக சமூகத்தின் ஒழுக்க ரீதி வளர்ச்சிக்கும் மனச்சான்று உருவாக்கலுக்கும் உதவுவதாகத் தொடர்கின்றது என்பதையும் எடுத்துரைத்தார் பாப்பிறை.
2008ம் ஆண்டு திருச்சபைக்கும் பிரசில் நாட்டிற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒத்துழைப்பின் ஒப்பந்தம் குறித்தும் இங்கு குறிப்பிட்ட திருத்தந்தை, இதன் வழி தலத்திருச்சபை தன் முழு சக்தியுடன் ஒவ்வொரு குடிமகனின் வளர்ச்சிக்கென உழைக்க ஊக்கம் கிட்டியுள்ளது என்றார்.
அரசின் மதச்சார்பற்ற போக்கை பாதிக்காத வகையில், பொதுநலனை மனதில் கொண்டதாய் அனைத்துப் பள்ளிகளிலும் மத வகுப்புகள் இடம்பெற வேண்டியதன் தேவை குறித்தும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
2013ம் ஆண்டில் ரியோ தி ஜெனீரோவில் இடம்பெற உள்ள 28வது உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களில் தான் பங்குபெறுவதற்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார் பாப்பிறை.







All the contents on this site are copyrighted ©.