2011-10-29 16:38:24

அக்டோபர் 30, வாழ்ந்தவர் வழியில்... ஹோமி ஜெஹாங்கீர் பாபா


அணுசக்தியின் அறிவியல் தேடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்த பெருமைக்குரியவர் ஹோமி ஜெஹாங்கீர் பாபா (Homi Jehangir Bhabha). இவர் 1909ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி செல்வம் மிகுந்த ஒரு பாரசீகக் குடும்பத்தில் பிறந்தார்.
மும்பையில் பள்ளிப்படிப்பை முடித்த ஹோமி பாபா, தன் 18வது வயதில் இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் தொழிநுட்பக் கல்வியைத் துவக்கினார். அணுசக்தி ஆய்வில் இவரது ஆர்வம் அதிகம் வளர்ந்தது.
1939ல் இவர் இந்தியாவுக்குத் திரும்பிய நேரம் இரண்டாம் உலகப்போர் துவங்கியது. நொபெல் பரிசு பெற்ற சர் சி.வி.இராமன் தலைமையில் பெங்களூரில் இயங்கி வந்த இந்திய அறிவியல் நிறுவனத்தில் பணி புரிவதற்கு ஹோமி பாபா அழைப்பு பெற்றார்.
ஹோமி பாபா 1945ம் ஆண்டு மும்பை அணு ஆய்வு நிறுவனத்தையும், மூன்று ஆண்டுகளில் இந்திய அரசின் அணுசக்தி துறையையும் நிறுவினார். 1954ம் ஆண்டு இவருக்கு இந்திய அரசு பத்மபூஷன் விருதை வழங்கியது. 1955ம் ஆண்டு அணுசக்தியின் அமைதி பயன்பாடு என்ற ஐ.நா. அகிலஉலக அமைப்பின் தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அணுசக்தியின் ஆய்வுகளை இந்தியாவில் அறிமுகம் செய்ததால், ஹோமி பாபா, இந்திய அணுசக்தித் திட்டங்களின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். அறிவியலில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட இவர் ஒரு சிறந்த ஓவியரும் கூட. பாரம்பரிய இசையிலும், தாவரங்களிலும் அதிக ஆர்வம் கொண்டவர்.
வியென்னாவில் நடைபெற்ற அணுசக்திக் கருத்தரங்கில் கலந்து கொள்ள செல்லும் வழியில், இவர் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானதால், 1966ம் ஆண்டு சனவரி 24ம் தேதி உயிரிழந்தார்.
இந்த விமான விபத்து குறித்த பல முரண்பட்டத் தகவல்கள் வெளி வந்தன. இது ஒரு திட்டமிடப்பட்ட விபத்தா என்ற கேள்விகளும் எழுந்தன. Trombayல் இவர் உருவாக்கிய அணுசக்தி நிறுவனம் தற்போது இவர் நினைவால், பாபா அணு ஆய்வு மையம் என்று அழைக்கப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.