2011-10-27 15:56:03

அசிசி நகரில் நடைபெற்ற உலக அமைதி நாள் கூட்டத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழங்கிய உரை


அக்.27,2011. 1986ம் ஆண்டு, அக்டோபர் 27ம் தேதி திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் இத்தாலியின் அசிசி நகரில் உலக அமைதிக்காக பிறசமயத் தலைவர்களைச் செபிக்கும்படி அழைத்தார். உலக அமைதி வேண்டி நடத்தப்பட்ட அந்த செப நாளின் 25ம் ஆண்டு நிறைவையொட்டி அதே அக்டோபர் 27, இவ்வியாழனன்று அசிசி நகரில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் உலகின் பல நாடுகளிலிருந்தும் அழைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட பல்சமயத் தலைவர்களுடன் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இவ்வியாழன் காலை 8 மணிக்கு வத்திக்கானிலிருந்து இரயில் பயணம் மேற்கொண்ட திருத்தந்தை, 9.45 மணி அளவில் அசிசி நகர் சென்றடைந்தார். 10.30 மணி அளவில் விண்ணகத் தூதர்களின் புனித மரியா பேராலயத்தில் பல்சமயத் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் திருத்தந்தை வழங்கிய உரைக்கு இப்போது செவி மடுப்போம்.

25 ஆண்டுகளுக்கு முன் 1986ம் ஆண்டு, அக்டோபர் 27ம் தேதி அருளாளர் இரண்டாம் ஜான்பால் இந்நகரில் உலக அமைதிக்காக பிற சமயத் தலைவர்களைச் செபிக்கும்படி அழைத்திருந்தார். மூன்று ஆண்டுகள் சென்று, 1989ம் ஆண்டு ஜெர்மனியைப் பிரித்திருந்த பெர்லின் சுவர் எவ்வித இரத்தம் சிந்தலும் இல்லாமல் தகர்க்கப்பட்டு, இரு வேறு நாடுகளாய் பிரிந்திருந்த ஜெர்மனி ஒன்றானது.
பெர்லின் சுவர் இடிந்தபோது, அச்சுவற்றுக்குப்பின் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல போர் கருவிகளும் மறைந்தன. எவ்வித இரத்தம் சிந்தலும் இல்லாமல் நடைபெற்ற இந்த மாற்றத்திற்குக் காரணம் மக்களின் அமைதி வேட்கையே. இந்த வரலாற்று நிகழ்வுக்குப் பின்னும், உலகில் அமைதி நிரந்தரமாகவில்லை.
நாம் வாழும் உலகில் பெரும் போர்ச் சூழல் நம்மை பயமுறுத்தவில்லை என்றாலும், பல வகையிலும் மக்கள் தங்கள் சுதந்திரத்தையும், அமைதியையும் இழந்து வாழும் அவலத்தை நாம் தினமும் காண்கிறோம். சுதந்திரம் என்பது வன்முறையைப் பயன்படுத்தவும் சுதந்திரம் உண்டு என்ற தவறான எண்ணங்களை விதைத்துள்ளது.

இன்று நிலவும் வன்முறையை நாம் சிறிது ஆழமாக ஆய்வு செய்வது பயனளிக்கும். இன்றைய வன்முறை இரு வகைகளில் வெளிப்படுகிறது. தீவிரவாதம் என்ற வடிவத்தில் நிலவும் வன்முறை ஒரு வகை. தீவிரவாதம் பல நேரங்களில் மதங்களின் அடிப்படையில் எழுகின்றது. வன்முறையைத் தூண்டுவதென்பது எந்த ஒரு மதத்தாலும் ஏற்றக்கொள்ளப்பட முடியாத உண்மை என்பதை 1986ம் ஆண்டு அசிசி நகரில் கூடிய எல்லா மதத் தலைவர்களும் ஒரே குரலில் கூறினார்கள். இன்று நாம் மீண்டும் அதே உண்மையை உலகறியச் செய்கிறோம்.
ஒரு கிறிஸ்தவன் என்ற முறையில் நான் ஒன்றை இந்நேரத்தில் கூற விழைகிறேன். திருச்சபையின் வரலாற்றில், விசுவாசத்தை நிலைநிறுத்தும் நோக்கத்துடன் கிறிஸ்தவ மறையும் வன்முறையை பயன்படுத்தியுள்ளது என்பதைக் குறித்து நாங்கள் வெட்கப்படுகிறோம். மதங்களின் உண்மை வழிகளைக் காண நாம் உரையாடல்களை வளர்ப்பதும், ஆழப்படுத்துவதும் இன்றைய நம் கடமையாகிறது.

மதங்கள் வன்முறைகளுக்கு வழிவகுப்பதால், மதங்களே வேண்டாம் என்று கூறும் போக்கு உலகில் பெருகி வருகிறது. வன்முறைகளை வளர்க்கும் கடவுளும், மதங்களும் தேவையில்லை என்று கூறும் பல குழுக்களின் மத்தியிலும் வன்முறைகள் பெருகி வருகின்றன. வன்முறையின் மற்றொரு வகை இதுவே. கடவுளையும், மதங்களையும் புறக்கணித்து வாழ்பவர்கள் மத்தியில் நிலவும் இந்த வன்முறை இன்னும் ஆபத்தானது. தங்களை மீறிய எதுவும் உலகில் இல்லை என்ற எண்ணத்துடன் இவர்கள் வன்முறைகளை மேற்கொள்ளும்போது, அது எல்லை மீறிய வகைகளில் வெளிப்படுகிறது.
கடவுள் இல்லை என்பதால் உருவாக்கப்படும் வெற்றிடத்தை நிறைப்பதற்கு பணம், கட்டுக்கடங்காத அதிகாரம் ஆகிய போக்குகள் பெருகுகின்றன. தான் என்ற சுயநலத்தை வளர்க்கும் வழிகள் மற்ற சமுதாயச் சிந்தனைகளைப் புறந்தள்ளுகின்றன.
எவ்வகையிலும் இன்பத்தைத் தேடுவதைக் கருத்தாய் கொண்டுள்ள இவ்வுலகில், போதைப் பொருட்களின் ஆதிக்கம் பெருகி வருகிறது. இந்தப் போதைப் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், மற்றும் வர்த்தகம் செய்பவர்கள் அனைவரும் தங்களது சொந்த இலாபத்தை மட்டுமே நோக்குகின்றனர். போதைப் பொருள் பயன்பாட்டால் வாழ்வைச் சீரழிக்கும் மக்கள் மீது, முக்கியமாக, இளையோர் மீது எவ்வித அக்கறையும் இல்லாமல் இவர்கள் செயல்படுகிறார்கள். கடவுளின் இடத்தைப் பணம் பெற்றிருப்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

மதநம்பிக்கை உள்ளவர்களும், மதநம்பிக்கை அற்றவர்களும் உருவாக்கும் வன்முறைகளை நோக்கும் அதே நேரம், கடவுள் நம்பிக்கை, மதப்பற்று ஆகியழை இல்லாதபோதும், உண்மையைத் தேடுவோரை நாம் இப்போது எண்ணிப் பார்க்க வேண்டும். இவர்கள் உண்மையையும், அமைதியையும் தேடி செல்லும் பயணிகள். இவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களிடமும், கடவுள் நம்பிக்கை அற்றவர்களிடமும் கேள்விகளை எழுப்புகின்றனர். இவர்கள் இன்னும் கடவுளையும், உண்மையையும் காண முடியாமல் இருப்பதற்கு, மத நம்பிக்கையுள்ளவர்களும் நம்பிக்கையற்றவர்களும் நடந்து கொள்ளும் வாழ்வே காரணமாகிறது.
இன்று நாம் அசிசி நகரில் கூடியிருக்கும் இவ்வேளையில் மத நம்பிக்கையுள்ளவர்களை மட்டும் நான் அழைக்கவில்லை; மாறாக, கடவுள் நம்பிக்கையற்றவர்களையும் அழைத்துள்ளேன். நாம் அனைவருமே உண்மையை, நன்மையை, அமைதியைத் தேடும் பயணிகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இறுதியாக, நான் ஒன்றை மீண்டும் உறுதியாகக் கூற விழைகிறேன். வன்முறைகளுக்கு எதிரான வழிகளைத் தேடுவதிலும், உண்மை அமைதியை உலகில் நிலை நாட்டும் முயற்சிகளிலும் கத்தோலிக்கத் திருச்சபை என்றும் தயங்காது என்பதை வலியுறுத்திக் கூற விழைகிறேன். நாம் அனைவருமே உண்மையையும், அமைதியையும் தேடிச் செல்லும் பயணிகளே.








All the contents on this site are copyrighted ©.