2011-10-26 16:15:39

கிறிஸ்துவின் பிரசன்னத்தை இவ்வுலகில் தெளிவாக நிலைக்க வைப்பது கத்தோலிக்க விசுவாசிகளின் பணி தென் அமெரிக்க ஆயர்


அக்.26,2011. புதிய மறைபரப்புப் பணியில் கத்தோலிக்க விசுவாசிகள் முழுமையாக ஈடுபட்டு, பொது வாழ்வில் கிறிஸ்துவின் பிரசன்னத்தை இன்னும் தெளிவாக நிலைக்க வைப்பது அவர்கள் பணி என்று தென் அமெரிக்காவின் சிலி நாட்டு ஆயர் ஒருவர் கூறினார்.
இன்றைய உலகில் நிரந்தர அம்சங்கள் எதுவென்றும், கடந்து செல்லும் அம்சங்கள் எதுவென்றும் புரியாத ஒரு சூழலில் மக்கள் வாழ்ந்து வருவதால், பொது நிலையினர் நிரந்தமானவைகள் பக்கம் மக்களின் கவனத்தைத் திருப்பும் ஒரு முக்கிய பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று சிலி நாட்டின் Santiago உயர்மறைமாவட்டத்தின் பேராயர் Ricardo Ezzati கூறினார்.
‘கத்தோலிக்கர்களும் பொது வாழ்வும்’ என்ற தலைப்பில் அண்மையில் சிலி நாட்டில் நடைபெற்ற நான்காவது அகில உலகக் கருத்தரங்கில் பேசிய பேராயர் Ezzati, புதிய மறைபரப்புப் பணியில் பொதுநிலையினர் ஈடுபடுவதற்கு சிறப்பான அழைப்பை விடுத்தார்.
இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட CNA என்ற கத்தோலிக்கச் செய்தி நிறுவனத்தின் இயக்குனர் Alejandro Bermudez, இவ்வுலகம் பல்வேறு அச்சங்களால் அமைதி இழந்து தவிக்கிறதென்றும், அருளாளர் இரண்டாம் ஜான் பால் தன் செய்திகளில் அடிக்கடி பகிர்ந்து வந்த 'அஞ்ச வேண்டாம்' என்ற கருத்தை உலகில் பரப்புவது இன்றைய இளையோரின் முக்கியக் கடமை என்றும் வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.