2011-10-26 16:15:14

அசிசி உலக அமைதி நாளில் ஒதுக்கப்பட்டிருக்கும் அமைதி செபநேரம் ஆசிய ஆன்மீக முறையைத் தழுவியதாய் உள்ளது - வத்திக்கான் அதிகாரி


அக்.26,2011. இத்தாலியின் அசிசி நகரில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தலைமையில் நடைபெறும் உலக அமைதி நாள் பல்சமயக் கூட்டத்தின்போது அமைதி செபநேரம் ஒதுக்கப்பட்டிருப்பது ஆசிய ஆன்மீக முறையைத் தழுவியதாய் உள்ளது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
தாய்லாந்தில் பிறந்தவரும், திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் நேரடிச் செயலருமான பேரருள்திரு Andrew Thanya-anan Vissanu, ஆசிய மக்களிடையே மௌனம் வலிமை மிக்கதொரு செபமாகக் கருதப்படுகிறது என்றும், இவ்வியாழனன்று அசிசி நகரில் மௌனம் கடைபிடிக்கப்படுவதை ஆசிய சமயத் தலைவர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர் என்றும் கூறினார்.
இக்கூட்டத்தின் முடிவில் அனைத்து மதத்தலைவர்களும் அளிக்கவிருக்கும் அமைதி உறுதிமொழி சீன மொழியில் வாசிக்கப்படும் என்று கூறிய பேரருள்திரு Vissanu, சீனாவிலிருந்து முதன் முறையாக பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளனர் என்றும், இவர்கள் Shaolin மடத்திலிருந்து அழைக்கப்பட்டுள்ள துறவிகள் என்றும் சுட்டிக் காட்டினார்.
11 நாடுகளிலிருந்து அழைக்கப்பட்டுள்ள 68 புத்த பிக்குகள், ஜப்பானிலிருந்து முதன் முறையாக நான்கு புதிய சமயங்களிலிருந்து அழைக்கப்பட்டுள்ள 13 பிரதிநிதிகள் உட்பட பல மதத்தைச் சார்ந்தவர்கள் ஆசியாவிலிருந்து அழைக்கப்பட்டுள்ளனர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இந்தியாவிலிருந்து இந்து, சமணம், சீக்கியம் உட்பட பல்வேறு மதங்களின் பிரதிநிதிகள், மகாத்மா காந்தியின் பேரன் இராஜ்மோகன், சுவாமி அக்னிவேஷ் ஆகியோர் அடங்கிய 18 பேர் குழு ஒன்று இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.