2011-10-25 15:56:39

உலகக் குடியேற்றதார நாளுக்கான திருத்தந்தையுயின் செய்தி


அக்.25,2011. வரும் ஆண்டு சனவரி மாதம் 15ம் தேதி சிறப்பிக்கப்படவிருக்கும் உலகக் குடியேற்றதாரர் நாளையொட்டி 'குடியேற்றமும் புதிய நற்செய்தி அறிவித்தலும்' என்ற தலைப்பில் சிறப்புச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இச்செவ்வாயன்று திருப்பீடத்தால் வெளியிடப்பட்ட திருத்தந்தையின் செய்தி, இன்றைய உலகில் நல்வாழ்வைத்தேடியும், சித்ரவதைகளின் அச்சுறுத்தலாலும், போர், வன்முறை, பசி மற்றும் இயற்கைப் பேரிடர்களாலும் சொந்த நாட்டிற்குள்ளும் வெளிநாடுகளிலும் மக்கள் குடிபெயரவேண்டியிருப்பதால் எழுந்துள்ள ஒழுக்க ரீதி, ஆன்மீக மற்றும் மனித குல பிரச்னைகள் குறித்து சிந்திக்க அழைப்பு விடுக்கிறது.
பல இனத்தவரும் பல கலாச்சாரப் பின்னணியைக் கொண்டவர்களும் ஒரே குடும்பமாய் வாழவேண்டிய கட்டாயச் சூழல்கள் உருவாகி வரும் இன்றைய காலக்கட்டத்தில், மதத்தை ஒதுக்கி வைத்து வாழ்தல், கிறிஸ்தவ விரோத போக்கு, பிரிவினை இயக்கங்கள் போன்றவை இதற்கு பெருந்தடைகளாக நிற்பதையும் திருத்தந்தை தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார். கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக வாழும் பகுதிகளுக்கு குடிபெயரும் கிறிஸ்தவர்களிடையே பணியாற்றும் திருச்சபை அதிகாரிகள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, கிறிஸ்தவ மனச்சான்றை உயிர்துடிப்புடையதாக வைத்திருக்க உதவும் புதிய நற்செய்தி அறிவிப்பின் தேவை குறித்தும் அதில் வலியுறுத்தியுள்ளார்.
தங்கள் சொந்த நாட்டிலிருந்து அடைக்கலம் தேடி வேறு நாடுகளுக்குச் செல்ல மக்களைத் தூண்டும் நிலைகள் குறித்து பத்திரிகைத்துறை நேர்மையான முறையில் வெளிச்சம் போட்டுக் காட்டவேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளார் பாப்பிறை.
குடியேற்றதாரர் மற்றும் அகதிகளுக்காக கத்தோலிக்க சமூகம் செபிக்க வேண்டிய கடமையையும் வலியுறுத்தியுள்ள பாப்பிறை, சர்வதேச மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளையும் உலகக் குடியேற்றதாரர் நாளுக்கான தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.