அக்.24,2011. இந்தியாவில் மங்களூர் நகரில் இரு கத்தோலிக்க நிறுவனங்கள் இஞ்ஞாயிறன்று தாக்கப்பட்டுள்ளதைக்
குறித்து பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளன. பெத்தனி அருள்சகோதரிகளால் நடத்தப்படும் புனித
தெரேசா பள்ளி மீதும், மங்களூர் மறைமாவட்டம் நடத்தி வரும் பதுவை கல்லூரி மீதும் இஞ்ஞாயிறன்று
அடையாளம் தெரியாத நபர்கள் கற்களையும் சோடா புட்டிகளையும் எறிந்து சேதங்களை உருவாக்கியுள்ளனர். ஞாயிறு
காலை மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் தெரேசா பள்ளியின் முகப்புப் பகுதியில் இருந்த கண்ணாடி
சன்னல்கள் மீதும், புனித தெரேசா திரு உருவச் சிலை மீதும் கற்கள் எறிந்தனர் என்றும், காவல்
காரர்கள் வந்ததும், அவர்கள் மறைந்தனர் என்றும் பெத்தனி அருள்சகோதரி ரோஸ் செலின் கூறினார். 1997ம்
ஆண்டு துவக்கப்பட்ட இந்தப் பள்ளியில் 1300க்கும் அதிகமான மாணவிகள் பயில்கின்றனர் என்றும்,
இவர்களில் பெரும்பான்மையினர் பிற மதங்களைச் சார்ந்தவர்கள் என்றும் UCAN செய்திக் குறிப்பொன்று
கூறுகிறது. இத்தாக்குதலைத் தொடர்ந்து, 200க்கும் மேற்பட்ட பெற்றோர் பள்ளிக்கு விரைந்தனர்
என்றும், பெற்றோர் ஆசிரியர் கழகம் ஏற்பாடு செய்த ஒரு பத்திரிக்கையாளர் கூட்டத்தில் இச்சம்பவம்
வன்மையாகக் கண்டிக்கப்பட்டதென்றும் இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது. மங்களூர்
மறைமாவட்டம் நடத்தி வரும் பதுவை கல்லூரியில் உள்ள சிறு ஆலயத்தின் சன்னல்கள் கற்களால்
தாக்கப்பட்டதென்றும், இவ்விரு தாக்குதல்களையும் ஒரே குழுவினர் செய்திருக்கக் கூடும் என்றும்
கல்லூரியின் முதல்வர் அருள்தந்தை மைக்கில் சாந்துமேயர் கூறினார். 2008ம் ஆண்டு கிறிஸ்தவர்களுக்கு
எதிராக கர்நாடகாவில் நடைபெற்ற கலவரங்களின் போதும் இக்கல்லூரி தாக்கப்பட்டதென்றும், புனித
தெரசா பள்ளி 2007 மற்றும் 2009 ஆகிய இரு ஆண்டுகள் தாக்கப்பட்டதென்றும் சொல்லப்படுகிறது.