2011-10-24 15:58:51

தீபாவளித் திருவிழாச் சிறப்பு செய்தி


அக்.24,2011. அக்டோபர் 26, இப்புதன் தீபாவளித் திருவிழா. இருப்பவர் இல்லாதவர், படித்தவர் படிக்காதவர் என்ற வேறுபாடின்றி இந்தியத் திருநாடே இந்தத் தீபங்களின் திருவிழாவுக்குத் தயாரித்து வருகிறது. இவ்விழாவையொட்டி தனது சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்கிறார் அருட்பணி இராஜேந்திர சேகர், கும்பகோணம் மறைமாவட்டம்.

தீபாவளி என்றவுடன் சட்டென்று நினைவுக்கு வருவது என்ன? பட்டாசுக்கள், புத்தாடைகள், இனிப்புப் பலாகரங்கள், கங்கா ஸ்நானங்கள் இவைகளுடன் சிறப்பு சினிமா பட ரிலீஸ்கள், தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிக் கொண்டாட்டங்கள்.
தீபம் என்றால் ஒளி. ஆவளி என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி.
தீபாவளி என்ற வார்த்தை சமஸ்கிருதத்திலிருந்து வருகிறது. இருப்பினும் இது அனைத்து மொழிகளிலுமே 'தீபாவளி' என்றுதான் அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகை ஐப்பசி மாதத்தில் அமாவாசைக்கு முன் தினம் கொண்டாடப்படுகிறது.
எது எப்படியோ, தீபாவளியைக் கொண்டாட ஒரு மாதத்திற்கு முன்பே தயாராகி விடுகிறோம். எந்தக் கடையில் துணி வாங்குவது, பட்டாசு வாங்க சிவகாசி போலாமா? தீபாவளி அன்று இரவு சென்றால் மலிவாகப் பொருட்களையும் ஆடைகைளயும் அள்ளி வரலாமே, ஏன் அவசரப்படவேண்டும் காத்திருக்கலாமே! என்னென்ன பலகாரம் செய்யலாம். செய்யலாமா? அல்லது கடையில் வாங்கலாமா? கடவுளே தீபாவளி அன்றைக்காவது கரண்ட் போகாம இருக்கனும். நல்ல நல்ல நிகழ்ச்சிகள் எல்லாம் எக்கச்சக்கமா இருக்கு, பார்த்து ரசிக்கனும். இப்படி பல கனவுகளோடு தீபாவளியைக் கொண்டாடுகிறோம்.
தீபாவளியன்று எண்ணெய் ஊற்றி, திரி வைத்து, அகல் விளக்குகளை ஏற்றியும், சிறுவர்கள் பட்டாசுக்களை கொளுத்தியும், புத்தாடை உடுத்தியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். இந்த நல்ல நாளில் எல்லாரும் கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்கிறார்கள். இன்னும் நேரிலும், தொலைபேசியிலும், கைபேசியிலும் முகநூலிலும் (Face book) 'தீபாவளி வாழ்த்துக்களை' சொல்லி மகிழ்கிறார்கள்.
அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை இதுதான். வீட்டுக்குள் நல்ல சக்திகள் வரவேண்டும், வீட்டிலிருக்கும் தீயவை யாவும் வெளியேறவேண்டும் என்பதை மையப்படுத்துகின்றது.
எல்லா விழாக்களும் ஒரு காரணத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும். ஆனால் தீபாவளிப் பண்டிகை மட்டும் பல்வேறு காரணங்களைக் கொண்டிருக்கிறது.
ஜைனர்கள் தீபாவளியை, மகாவீரர் முக்தி பெற்ற நாளாக கொண்டாடுகின்றனர்
சீக்கிய மதத்தில், அவர்களின் 6வது குருவாக இருந்த குரு ஹரிகோபிந்த் ஜி சிறையிலிருந்து விடுதலைப் பெற்று திரும்பியதைக் கொண்டாடும் வகையில் தீபங்களையும், மெழுகுவர்த்திகளையும் ஏற்றி வைத்து, தீபாவளியாகக் கொண்டாடுகின்றனர்.
இப்படி பல காரணங்களுக்காக கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையில் எனக்கெழுந்த கேள்வி, இந்திய நாட்டில் கொண்டாடப்படும் தீபாவளி, அல்லது ஒரே திருவிழா எப்படி பல்வேறு காரணங்களைக் கொண்டிருக்க முடியும்? எந்தக் காரணம் மிகச் சரியாக இருக்கும்? காரணங்கள் பலவாக இருந்தாலும் அவைகளில் இரண்டை மட்டும் நான் படித்ததிலிருந்து பகிர்ந்து கொள்கிறேன். வட இந்திய இந்து மக்கள் ஒரு காரணத்திற்காகவும், தென் இந்திய இந்து மக்கள் மற்றொரு காரணத்திற்காகவும் கொண்டாடுகின்றனர்.
வட இந்தியாவில் மக்கள் இத்தீபாவளிப் பண்டிகையை, பதினான்கு ஆண்டுகள் இராமன் வனவாசம் சென்ற போது சீதையை, இராவணன் சூழ்ச்சி செய்து கடத்திச் சென்றான். இதையடுத்து சீதையை மீட்க இலங்கை சென்று இராவணனோடு போரிட்டு இலங்கையைத் தகர்த்து சீதையை மீட்டு வந்தார் இராமன். இராமன் இல்லாமல் அயோத்தி மாநகரமே 14 ஆண்டுகள் இருளில் மூழ்கியிருந்ததாக வருந்திய வடஇந்திய மக்கள், இராமன் திரும்பி வந்ததும் சூரியனைக் கண்ட பனிபோல இருள் நீங்கி மாநகரமே ஒளி பெற்றதாக எண்ணி தீபங்களை ஏற்றி விழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தென் இந்தியாவில் மக்கள் இத்தீபாவளி பண்டிகைக்குத் தரும் விளக்கம் என்னவென்றால் ஆதிகாலத்தில் நரகாசுரன் என்று ஒருவன் இருந்தான். அவன் அவதாரத் திருமாலுக்கும் (அதாவது கிருஷ்ணருக்கும்) பூமிக்கும் (அதாவது சத்யாபாமைக்கும்) மகனாகப் பிறந்தான் என்றும், அவன் இந்திரன் உள்ளிட்ட தேவர்களையும், முனிவர்களையும் பலவாறு துன்புறுத்தி வந்ததாகவும், அவர்களின் வேள்விகளுக்கு இடையூறாக இருந்து பல்வேறு கொடுமைகளைச் செய்து வந்தான் என கற்பனைக் கதை சொல்லப்படுகிறது. இப்படி துன்புறுத்தப்பட்ட தேவர்களும் முனிவர்களும் நரகாசுரனின் தந்தை கிருஷ்ணரிடம் சென்று முறையிட, நரகாசுரனைக் கொல்வதற்கு அவனது தந்தையாகிய கிருஷ்ணன் தனது மனைவி சத்திய பாமாவை போருக்கு தேரில்; அழைத்துச் செல்ல, போரில் நரகாசுரன் கிருஷ்ணன் மீது அம்பு எய்த, தாக்கிய அம்பினால் கிருஷ்ணன் மயக்கமுற்று கீழே சரிய இதனைக் கண்டு சினம் கொண்ட சத்தியபாமா, தனது மகன் நரகாசுரனுக்கு எதிராக வில்லினை எடுத்து, அம்புகளைத் தொடுத்து, அவனைக் கொன்றதாக கதை போகிறது.
நரகாசுரனின் மரணம், தொல்லையிலிருந்து விடுபட்டதையும், கொடுமைகளிலிருந்து மீட்கப்பட்டதையும் எண்ணி தங்கள் வாழ்வில் இனி இருள் இல்லை. ஒளி கிடைத்துவிட்டது என்றெண்ணி தீபம் ஏற்றி கொண்டாடினர்.
பொதுவாக தென்னிந்தியாவில் விழாக்கள், பண்டிகைகள் கொண்டாடுவதற்குக் காரணம், விழாக்களை, பண்டிகைகளை முன்னிட்டாவது ஒரு நாள் தொடர் வேலையிலிருந்து ஓய்ந்திருக்க வேண்டும், இளைப்பாற வேண்டும் என்பதற்காகத்தான். அந்த நாளில் கோயிலுக்குச் சென்று கடவுளைத் தரிசிக்கவேண்டும் என்ற நல்ல பழக்கங்களை நம் முன்னோர்கள் வகுத்துக் கொடுத்துச் சென்றிருக்கிறார்கள்.
ஆனால், நம் முன்னோர் வகுத்துக் கொடுத்த ஓய்வுக்கு இப்போது புதிய இலக்கணம் கண்டுபிடித்து அதை 'ஜாலி' என்றாக்கிவிட்டார்கள். கடவுள் பயம் போய், இன்று உயிர் பயம், எதிர்காலச் சந்ததி வாழ நாம் என்ன செய்யப் போகிறோம் என்கிற பயம், ஒரு பவுன் 25,000 ரூபாயா? எப்படி என் பெண் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் திருமணம் செய்து வைக்கப்போகிறேன் என்ற பயம், இயற்கை நம்மை துரத்துகிறதோ என்ற பயம் இப்படி ஒவ்வொரு நாளும் மனிதனைப் புரட்டிப் போடுகிறது.
இந்த ஜாலி என்ற வார்த்தை, விளையாட்டில் தொடங்கி வினையாய்ப் போய் முடிகிறது. அது பட்டாசாக இருக்கலாம், மது அருந்துவதாக இருக்கலாம். புகைப்பதாக இருக்கலாம். ஏன் நகைச்சுவையாகவும் இருக்கலாம். வினையில் முடிந்ததும் விளையாட்டுக்குத்தான் சொன்னேன் அல்லது விளையாட்டுக்குச் செய்தேன், இப்படி ஆகிவிட்டதே என்று சொல்லி என்ன பயன்?
முன்பெல்லாம், கடவுள் பயத்தை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க, கிராமத்துப் பெற்றோர்கள் இப்படிச் சொல்லுவது வழக்கம், நீ இப்படி தப்பு செஞ்சா சாமி கண்ணக் குத்திடும். ஆனால் இன்று கடவுள் பயமா அப்டீனா? என்ன என்று கேட்பவர்கள் உயிருக்கு ஆபத்து வரும்போதுதான் 'கடவுளே' என்று வாய் நிறையக் கூப்பிடுகிறார்கள்.
நான் உண்டு என் வேலையுண்டு என் குடும்பம் உண்டு என்று எண்ணத்தைச் சுருக்கிக் கொண்டு வாழும் மக்கள் மத்தியிலும் கூட பொதுநலம் பேணும் மக்களும் வாழத்தான் செய்கிறார்கள். இதற்குச் சிறந்த உதாரணம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் வாழும் மக்கள் என்று சொல்லலாம். அணுமின் நிலையம் வருவதானால் எங்களது எதிர்காலச் சந்ததிகள் வாழ ஏற்ற சூழ்நிலை இல்லாமல் போய்விடும். அவர்களின் வாழ்வாதரங்கள் பாதிக்கப்படும். ஏன் எங்கள் தலைமுறையே இல்லாமல் போய்விடும் என்ற பயம் அவர்களை வாட்டுகிறது.
சரி, இவைககளுக்கும் தீபாவளிக்கும் என்ன சம்பந்தம்? இராமன் ஆண்டால் எனக்கென்ன? இராவணன் ஆண்டால் எனக்கென்ன? நரகாசுரன் செத்தால் எனக்கென்ன, வாழ்ந்தால் எனக்கென்ன? போகும் போது என்னத்த எடுத்துக்கிட்டு போப்போறோம், இருக்குற வரைக்கும் ஜாலியா இருப்போம் என்றுதான் பலர் நினைக்கிறார்கள். ஆனால் இந்து, இசுலாம், கிறிஸ்தவ சமயங்கள் பிறரன்பு சேவையில் கடவுளை நினை என்கிறது. நான் மகிழ்ச்சியாக இருக்கும் போது, உண்ணும்போது, உடுத்தும் போது நம் அருகில் இருக்கும் ஏழை நண்பரை நினைக்கிறோமா? பிரச்சனையில் சிக்கித் கவிக்கும் நண்பருக்கு உதவிக்கரம் நீட்டுகிறோமா?
இந்தியா பெரும்பாலும் கிராமங்களை உள்ளடக்கிய ஒரு நாடு என்பது எல்லாரும் அறிந்த ஒன்று. கிராமங்களில் வாழும் அனைவரும் யார்? அவர்கள் பெரும்பாலும் தினக்கூலிகள். ஒரு வேளை உணவு கிடைத்தால் போதும் என்ற நிலை. ஆனால் இந்த தீபாவளிக் கொண்டாடட்டம் என்ற ஒருநாள் மகிழ்ச்சிக்காக, வட்டிக்கு வாங்கி தீபாவளி செலவு செய்கிறார்கள். வருடம் முழுவதும் அதற்கு வட்டி, வட்டிக்கு கூடுதல் வட்டி என்று வாழ்க்கை முழுவதும் கஷ்டப்படுகிறார்கள். இது தான் அவர்களின் எதார்த்த வாழ்வு. புத்தாடைகள், வண்ணமயமான வான வேடிக்கைகள், பல வகையான பலகாரங்கள் இவைகளுக்கு செலவழிப்பதில், ஒரு சதவீதம் ஏழை எளியோருக்கு, பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு, பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்களுக்கு அல்லது யாரேனும் ஒருவருக்கு நம்மால் முடிந்த உதவி செய்தால் மனித நேயம் மலரும், அவர்களது வாழ்க்கையில் ஒளி பிறக்கும்.
தீபாவளிக் கொண்டாடும் நாம் நம்மை கேள்விக்குட்படுத்துவோம். நமது மனதில், எண்ணங்களில், சிந்தனைகளில், பேச்சுகளில், பார்வைகளில், செயல்களில் எத்தனை நரகாசுரன் தாண்டவமாடுகிறான்?
கோபம், பொறாமை, ஆணவம், ஏமாற்று, போலிவாழ்க்கை, புறங்கூருவது, பாலியல் பலாத்காரம், சுயநலம், திருட்டு, கையூட்டு இவையெல்லாம் நம்மில் ஒளிந்து கொண்டிருக்கும் நரகாசுரனின் செயல்பாடுகள்தானே?
தீபாவளிக்காக நாம் வெடிக்கின்ற பட்டாசுக்களின் வழியாக அதிக ஒலியை தாங்கமுடியாமல் கேட்கும் திறனை இழக்க அதிக வாய்ப்புள்ளது. மேலும், அதிக ஒலியினால் இதயநோய்கள், நரம்பு மண்டல பாதிப்பு போன்ற வியாதிகள் ஏற்படுகின்றன என்ற செய்திகளை நாம் அறிவோம்.
பட்டாசுகளை வாங்கி நமது காசைக் கரியாக்குவதைவிட அந்தப் பணத்தில் ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளுக்கும், அனாதை இல்லங்களுக்கும், முதியோர் இல்லங்களில் தவிப்பவர்களுக்கும் நம்மால் முடிந்ததைச் செய்யலாம்..
ஒவ்வொரு தீபாவளிக்கும்தான் நாம் பட்டாசுகளை வெடிக்கிறோம். இந்த தீபாவளிக்குப் புதுமுயற்சியாக தீபாவளியன்று காலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து, கடவுளை வணங்கி, புத்தாடை அணிந்து அருகில் உள்ள ஆதரவற்ற இல்லங்களுக்கோ, அல்லது அருகில் இருக்கும் ஏழைக்கோ நம்மால் முடிந்த உதவிகளைச் செய்தால் அவர்களும் இந்தத் தீபாவளியை உங்களைப் போல நம்மைப்போல மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம்..
எனவே இந்த தீபத் திருநாளில் பிறரது வாழ்விலும் ஒளியேற்ற முயற்சி செய்வோம். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.








All the contents on this site are copyrighted ©.