2011-10-24 15:58:36

ோபர் 25 வாழ்ந்தவர் வழியில்..... பாப்லோ ரூய்ஸ் பிக்காசோ


இஸ்பெயினின் மலகா (Málaga)நகரில் 1881ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி பிறந்த பாப்லோ ரூய்ஸ் பிக்காசோ (Pablo Ruiz Picasso), புகழ்பெற்ற ஓவியரும், சிற்பியும், நாடக அரங்கக் கலை நிபுணரும், மண்பாண்டக் கலைஞரும் ஆவார். 20 ம் நூற்றாண்டில் ஓவியத் துறையில் மாபெரும் திறமை மிக்கவரும் மற்றும் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் ஒருவராகத் திகழ்கிறார் இவர். 20ம் நூற்றாண்டில் நவீனக் கலை வளர்ச்சியடைவதற்கு இவரின் ஓவியங்கள் பேருதவியாக இருந்தன. இவர், கனவடிவங்களின் பல்வேறு கூறுகளை ஒருமித்துக் காட்டும் கியூபிசம் என்ற புதுமுறை ஓவியப் பாணியை ஜார்ஜெஸ் பிராக் (Georges Braque) என்பவருடன் கூட்டாகச் சேர்ந்து ஆரம்பித்து வைத்தவர். இவர், இந்தக் கலையில் பெரிதும் அறியப்படுகிறார். அமைதியின் அடையாளமான புறாவையும், ஒலிவ இலைகளையும் பிரபலப்படுத்தியவர் பாப்லோ பிக்காசோ ஆகும். இவர் தனது வாழ்வின் 91 ஆண்டுகளில் ஏறக்குறைய 80 ஆண்டுகளை ஓவியக் கலைக்காகச் செலவிட்டார். அக்காலத்தில் ஐரோப்பாவின் கலைத் தலைநகராகக் கருதப்பட்ட பாரிசுக்கு 1900ம் ஆண்டில் இவர் குடிபெயர்ந்தார். அங்கு பத்திரிகையாளரும் கவிருமான மாக்ஸ் ஜேக்கப் என்பவருடன் ஒரு சிறிய அறையில் தங்கியிருந்தார். அச்சமயம் எவ்வளவுக்கு வறுமையும் சோர்வும் குளிரும் வாட்டியதென்றால் குளிரைப் போக்குவதற்காக, பிக்காசோ தனது வேலைப்பாடுகளில் பெரும்பகுதியை எரித்தார் என்று சொல்லப்படுகிறது. 1901ம் ஆண்டு முதல் 1904ம் ஆண்டு வரை இவர் வரைந்த ஓவியங்கள் பெரும்பாலும் நீலநிறம் கொண்டவையாகக் காணப்பட்டன. இஸ்பெயினில் இவர் மேற்கொண்ட சுற்றுப்பயணம், நண்பரொருவரின் இறப்பு ஆகிய நிகழ்வுகள் இவரது இக்கால ஓவியங்களில் செல்வாக்குப் பெற்றிருந்ததாகக் கூறப்படுகின்றது. கழைக்கூத்தாடிகள், விபச்சாரிகள், பிச்சைக்காரர்கள், கலைஞர்கள் போன்றவர்கள் இக்காலத்தில் இவர் வரைந்த ஓவியங்களில் பெரும்பாலும் சித்தரிக்கப்பட்டனர். 1908ம் ஆண்டு முதல் 1909ம் ஆண்டு வரையிலானக் காலப் பகுதியில் இவரது படைப்புக்களில் ஆப்ரிக்கக் கலைப்பொருட்களிலிருந்து கிடைத்த அகத்தூண்டல்களின் அடிப்படையில் உருவான ஓவியங்களே முதன்மை பெற்றிருந்தன. பிக்காசோ, 1973ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி காலமானார். Pablo Diego José Francisco de Paula Juan Nepomuceno María de los Remedios Crispiniano de la Santísima Trinidad என்பது இவரது திருமுழுக்குப் பெயராகும். பல்வேறு புனிதர்கள் மற்றும் உறவினர்களைக் கவுரப்படுத்தும் விதமாக, வீட்டின் முதல் பிள்ளையாகிய பிக்காசோவுக்கு இப்பெயர் சூட்டப்பட்டது. இவர் பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர். அமெரிக்க ஐக்கிய நாடும் ஐக்கிய நாடுகள் நிறுவனமும் கொரியச் சண்டையில் தலையிட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கொரியப் படுகொலைகள் என்ற ஓவியத்தை வரைந்தார் பாப்லோ ரூய்ஸ் பிக்காசோ. இவர் 1962ம் ஆண்டில் லெனின் அமைதி விருதையும் பெற்றார்.








All the contents on this site are copyrighted ©.