2011-10-22 16:05:31

அக்டோபர் 23, வாழ்ந்தவர் வழியில்... ஜான் பாய்ட் டன்லப்


வாகனங்களில் பயன்படுத்தப்படும் டயர்கள் என்றதும், டன்லப் என்ற நிறுவனத்தின் பெயர் நம்மில் பலருக்கு நினைவில் எழும். இந்தப் பெயருக்குச் சொந்தக்காரர் John Boyd Dunlop. இவர் ஸ்காட்லாந்தில் வட அயர்ஷர் (Ayrshire) என்ற மாநிலத்தில் 1840ம் ஆண்டு பிப்ரவரி 5ம் நாள் பிறந்தார்.
கால்நடை மருத்துவத்தில் பட்டம் பெற்ற இவர், தன் 27வது வயதில் அயர்லாந்துக்குச் சென்று, அங்கு கால்நடை மருத்துவமனையொன்றை நிறுவினார். அந்நாட்களில் இங்கிலாந்தை ஆண்ட விக்டோரியா அரசியின் நல்ல நண்பர் இவர்.
ஜான் டன்லப்புக்கு 47 வயதானபோது, தன்னுடைய மகன் விளையாடுவதற்கு பயன்படுத்திய மூன்று சக்கர வண்டியில் தன்னுடைய புதிய கண்டுபிடிப்பான காற்று அடைக்கப்பட்ட டயர்களைப் பொருத்தினார்.
டன்லப்பின் இந்தக் கண்டுபிடிப்பு விரைவில் பிரபலமானது. அயர்லாந்தைச் சேர்ந்த Willie Hume என்ற சைக்கிள் பந்தய வீரர், டன்லப்பின் கண்டுபிடிப்பான காற்றடைக்கப்பட்ட டயர்கள் பொருத்தப்பட்ட சைக்கிளின் உதவியால் பல பந்தயங்களில் வென்றார்.
காற்றடைக்கப்பட்ட டயர்கள் 1890களில் கார்களுக்குப் பொருத்தப்பட்டன. டயர்கள் வர்த்தக உலகில் தனக்குத் தனியொரு இடத்தை உருவாக்கிக்கொண்ட John Boyd Dunlop, 1921ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி காலமானார்.








All the contents on this site are copyrighted ©.