2011-10-21 16:01:03

சமயச் சுதந்திரமும் வழிபாட்டுச் சுதந்திரமும் பாதுகாக்கப்படுவதற்கு நெதர்லாந்து அரசு விழிப்புடன் செயல்படும் : திருத்தந்தை நம்பிக்கை


அக்.21,2011. நெதர்லாந்து மற்றும் உலகின் பிற நாடுகளில் சமயச் சுதந்திரமும் வழிபாட்டுச் சுதந்திரமும் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுவதற்கு நெதர்லாந்து அரசு விழிப்புடன் செயல்படும் என்ற தனது நம்பிக்கையைத் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இவ்வெள்ளிக்கிழமை, திருப்பீடத்துக்கான நெதர்லாந்து நாட்டுப் புதிய தூதர் Joseph Weterings இடமிருந்து நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்று உரையாற்றிய திருத்தந்தை, இக்காலத்திய சமயச் சுதந்திரம் குறித்த விவகாரம் திருப்பீடத்துக்குக் கவலை தருவதாக இருக்கின்றது என்று கூறினார்.
சமயச் சுதந்திரம், உலகின் சில பகுதிகளில் சட்டரீதியானக் கட்டுப்பாடுகள் மூலம் அச்சுறுத்தப்பட்டு வரும்வேளை, சட்டரீதியாக இது பாதுகாக்கப்படும் பல சமூகங்களில்கூட மதத்திற்கு எதிரான மனநிலையால் இது அச்சுறுத்தப்பட்டுள்ளது எனவும் திருத்தந்தை கூறினார்.
போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் தொழில் ஆகியவற்றை ஊக்கமிழக்கச் செய்வதற்கு டச்சு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தனிப்பட்டவர்க்குச் சுதந்திரம் வழங்குவதில் நெதர்லாந்து நாடு நீண்டகாலமாக முன்னணியில் நிற்கின்றது என்பதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, இந்தச் சுதந்திரப் போக்கினால் மக்கள், தங்களை அல்லது பிறரைப் புண்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதை ஊக்கப்படுத்தப்படக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.
ஏழைகள், நோயாளிகள், கருவில் வளரும் குழந்தைகள், முதியோர், அநியாயமாய்ப் பாகுபடுத்தப்படும் சிறுபான்மையினர் உட்பட சமுதாயத்தில் குரல் அற்றவர்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்து வரும் திருச்சபை, உலகில் நீதிக்கும் சரியான காரணங்களுக்கும் எதிராக இடம் பெறும் செயல்களை எதிர்க்கின்றது என்றும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.