2011-10-21 16:00:52

கடாஃபியின் இறப்பு, கொடூரமும் அடக்குமுறையும் கொண்ட ஆட்சியின் முடிவைக் குறிக்கிறது - திருப்பீடப் பத்திரிகை அலுவலகம்


அக்.21,2011. லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி முவாம்மர் கடாஃபியின் இறப்பு, மனித மாண்பு மற்றும் சட்டம்-ஒழுங்கின் அடிப்படையில் அந்நாட்டில் புதிய அத்தியாயத்தைத் திறக்க வேண்டும் என்று திருப்பீடம் வலியுறுத்துகிறது.
கடாபி, தனது சொந்த ஊரான செர்த்தில் கொல்லப்பட்டார் என்ற செய்தி இவ்வியாழனன்று வெளியான சிலமணி நேரங்களில் அறிக்கை வெளியிட்ட திருப்பீடப் பத்திரிகை அலுவலகம், கடாஃபியின் இறப்பு, கொடூரமும் அடக்குமுறையும் கொண்ட ஆட்சியின் முடிவைக் குறிக்கிறது என்று கூறியது.
இந்த வட ஆப்ரிக்க நாட்டில் இரத்தம் சிந்துதல் முடிவுக்கு வந்துள்ளது என்றும், லிபியாவின் புதிய அரசு, சமூகநீதி மற்றும் ஒன்றிப்புணர்வில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் என்ற நம்பிக்கையையும் அவ்வறிக்கை வெளியிட்டுள்ளது.
லிபியச் சிறுபான்மை கத்தோலிக்கச் சமுதாயம் தனது தன்னலமற்ற சேவையின் மூலம், குறிப்பாக பிறரன்பு மற்றும் நலவாழ்வுப் பணிகள் மூலம் தனது சாட்சிய வாழ்வைத் தொடர்ந்து அளிக்கும் என்றும் திருப்பீடப் பத்திரிகை அலுவலகத்தின் அறிக்கை கூறியது.
69 வயதாகும் சர்வாதிகாரி கடாஃபி, லிபியாவை சுமார் 42 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.