2011-10-21 15:00:59

அக் 22, 2011. வாழ்ந்தவர் வழியில் .... அஷ்ஃபக்குல்லா கான்


இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்று தன் 27ம் வயதிலேயே நாட்டிற்காகத் தன் உயிரையே தந்தவர் அஷ்ஃபக்குல்லா கான் (Ashfaqulla Khan). இவர் 1900மாம் ஆண்டில் உத்திரப்பிரதேசத்தின் ஷாஜகான்பூர் என்ற வரலாற்று சிறப்பு மிக்க நகரில் பிறந்தார். உருது மொழியில் கவிதைகள் எழுதி வந்த இவர், பிறிதொரு உருதுக் கவிஞரான இராம் பிரசாத் பிஸ்மில்லுடன் நெருங்கிய நண்பராகி, மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடினார். வன்முறையற்ற வழிகள் மூலம் நாட்டிற்கான விடுதலையைப் பெறமுடியாது என்பதை உறுதியாக நம்பிய இவர்கள் இருவரும், தீவிரவாதப் போக்குகளை கைக்கொண்டனர். பிரித்தானியர்கள் மனதில் அச்சத்தை விதைக்க வேண்டும் என்ற நோக்கிலும், விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்திற்குத் தளவாடங்கள் வாங்க நம் பணத்தைத்தான் திருடுகிறோம் என்ற உறுதியுடனும், இரயில் கொள்ளையில் ஈடுபட்டு பிரித்தானிய அரசுப் பணத்தைக் கைப்பற்றினர். 300 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியர்களிடமிருந்து சுரண்டப்பட்ட பணம் தான் அது என நியாயப்படுத்தினர். இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட 20 பேரும் கைது செய்யப்பட்டு, அஷ்ஃபக்குல்லா கான் மற்றும் இராம் பிரசாத் பிஸ்மில் உட்பட நான்கு பேருக்கு மரண தண்டனையும் ஏனைய 16 பேருக்கு நான்கு ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையும் விதிக்கப்பட்டன. இரு வேறு மதங்களைச் சேர்ந்த அஷ்ஃபக்குல்லா கானும் இராம் பிரசாத் பிஸ்மில்லும் 1927ம் ஆண்டு டிசம்பர் 19ந்தேதி வெவ்வேறு சிறைகளில் தூக்கிலிடப்பட்டனர். நண்பர்களாகவும் கவிஞர்களாகவும் இருந்த இவர்கள் இருவரையும் பிரிப்பதற்குச் சிறைச்சாலை அதிகாரிகளால் பல்வேறு குறுக்கு வழிகள் பின்பற்றப்பட்டன. 'பிஸ்மில் ஓர் இந்து, இந்தியா சுதந்திரமடைந்தால் அது இந்து இராஜ்ஜியமாகவே இருக்கும். அதனால் இஸ்லாமியர்கள் விடுதலைக்காகப் போராடுவது வீண்' என அப்போதைய மாவட்ட காவல்துறை ஆணையர் Tasadduk Husain Khan கூறிய போது அஷ்ஃபக்குல்லா கான் தந்த பதில் என்ன தெரியுமா?
' பண்டித் இராம் பிரசாத் பிஸ்மில் குறித்து உங்களைவிட எனக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் சொல்வதுபோல் இந்து இராஜ்யம் பிறந்தாலும், அது நீங்கள் அடிமையாய்ப் பணியாற்றும் பிரித்தானிய அரசைவிட சிறப்பானதாகவே இருக்கும்' என்பதாகும்.
இந்திய விடுதலைக்கானத் தாகம் அவரின் கடைசி மூச்சு வரை உறுதியாக இருந்தது.








All the contents on this site are copyrighted ©.