2011-10-19 15:01:20

கைதிகளைத் தனிமைப்படுத்தும் தண்டனையை அனைத்து நாடுகளும் ஒழிப்பதற்கு முன்வர வேண்டும் - ஐ.நா.ஆய்வாளர்


அக்.19,2011. சிறையில் கைதிகளைத் தனிமைப்படுத்தும் தண்டனையை அனைத்து நாடுகளும் ஒழிப்பதற்கு முன்வர வேண்டும் என்று ஐ.நா. அதிகாரி ஒருவர் கூறினார்.
உலகின் அரசுகள் பின்பற்றும் பல சித்திரவதைகளைக் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்ட ஐ.நா.ஆய்வாளர் Juan E. Méndez, தன் ஆய்வின் கண்டுபிடிப்புக்களை ஐ.நா.வின் பொது அவையில் இச்செவ்வாயன்று விளக்குகையில் இவ்வாறு கூறினார்.
தவிர்க்க முடியாத ஒரு சில சூழல்களில் ஒரு சில கைதிகள் தனிமைப்படுத்தப்பட வேண்டிய நிர்ப்பந்தம் உருவானால், தனிமைப்படுத்தப்படும் காலம் 15 நாட்களுக்கு மேல் நீடிக்கக்கூடாது என்றும், வயதில் குறைந்த இளையோரும், மன நலம் குன்றியவர்களும் இந்தத் தண்டனைக்கு ஒருபோதும் உட்படுத்தப்படக் கூடாது என்றும் ஆயவாளர் Juan E. Méndez வலியுறுத்தினார்.
அமெரிக்காவில் தற்போது ஏறத்தாழ 25000 கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் Guantánamo Bay போன்ற சிறப்புச் சிறைகளில் இத்தண்டனை காலம் 30 நாட்களுக்கும் மேல் நீடிப்பதாகவும் ஆய்வாளர் Juan E. Méndezன் அறிக்கை கூறுகிறது.
மேலும், இவ்வறிக்கையில் சீனாவின் தண்டனைகள் பற்றி அவர் குறிப்பிடும்போது, அங்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ஒரு பெண் ஈராண்டுகள் தனிமைப்படுத்தப்பட்டார் என்று கூறியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.