2011-10-19 14:59:52

கத்தோலிக்கத் திருச்சபை வழங்கியுள்ள சமுதாயக் கோட்பாடுகள் நல்வழிகாட்டும் ஒளி விளக்குகள் - மும்பை பேராயர்


அக்.19,2011. நன்னெறி விழுமியங்கள் குறைந்து, பாலைவனமாக மாறிவரும் இவ்வுலகில் கத்தோலிக்கத் திருச்சபை வழங்கியுள்ள சமுதாயக் கோட்பாடுகள் நல்வழிகாட்டும் ஒளி விளக்குகள் என்று மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ் கூறினார்.
அருளாளர் 23ம் அருளப்பர் 1961ம் ஆண்டு வெளியிட்ட Mater et Magistra என்ற சுற்றுமடலின் ஐம்பது ஆண்டு நினைவாக இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை அண்மையில் ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கைத் துவக்கி வைத்து உரையாற்றிய கர்தினால் கிரேசியஸ் இவ்வாறு கூறினார்.
"Mater et Magistra முதல் Caritas in Veritate வரை திருச்சபையின் சமுதாயப் படிப்பினைகள்" என்ற மையக் கருத்துடன் மும்பை, புனித பத்திநாதர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கருத்தரங்கில், ஆசிய ஆயர் பேரவையின் மனித முன்னேற்ற அவையின் தலைவர் பேராயர் Charles Bo மற்றும் திருப்பீடத்தின் இந்தியத் தூதர் பேராயர் Salvatore Pennacchio ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும், இக்கருத்தரங்கில் 100க்கும் அதிகமான குருக்கள், 178 துறவியர் இவர்களுடன் ஏறத்தாழ 500 மக்கள் கலந்து கொண்டனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.








All the contents on this site are copyrighted ©.