2011-10-19 15:00:04

இந்தோனேசிய அரசுத் தலைவருக்கு மதத் தலைவர்களின் திறந்த மடல்


அக்.19,2011. ஊழல்கள் பெருகி வரும் இந்தோனேசியாவில் நாட்டையும், அரசையும் காப்பாற்றும் கவலையில் மதத் தலைவர்கள் இணைந்துள்ளோம் என்று இந்தோனேசியாவின் பல்சமயத் தலைவர்கள் கூறினர்.
இந்தோனேசியாவின் பல்சமயத் தலைவர்கள், மனித நல ஆர்வலர்கள், மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்பட்டோர் பலரும் இணைந்து இந்தோனேசிய அரசுத் தலைவர் சுசிலோ பம்பாங் யுதோயோனோவுக்கு ஒரு திறந்த மடலை இச்செவ்வாயன்று அனுப்பியுள்ளனர்.
இந்தோனேசிய ஆயர் பேரவை அலுவலகத்திலிருந்து இச்செவ்வாயன்று புறப்பட்ட ஓர் ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இவர்கள் ஜகார்த்தா நகரின் மையப்பகுதிக்கு சென்று அங்கு தங்களது திறந்த கடிதத்தை வாசித்தனர்.
அரசுத்தலைவர் யுதோயோனோவும் பிற அரசியல் தலைவர்களும் ஊழலை ஒழிப்போம் என்று மக்களுக்கு உறுதிகள் வழங்கியிருந்தாலும், இதுவரை நாட்டில் ஊழல் அதிகரித்து வருகிறதேயொழிய குறையவில்லை என்று இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மைக் காலங்களில் மதங்களுக்கிடையே உருவாகும் மோதல்களால் எளிய மக்கள் பாதுகாப்புடன் வாழும் வழிகளும் நாட்டில் குறைந்து வருகிறதென்று இக்கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.