2011-10-18 14:57:50

அகில உலக வறுமை ஒழிப்பு நாளையொட்டி ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் வழங்கிய செய்தி



அக்.18,2011. உலகின் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவரும் முயற்சிகளில், அரசுகள் மக்களைப் புறக்கணிக்கும் ஆபத்து அதிகரித்துள்ளது என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
அக்டோபர் 17 இத்திங்களன்று கடைபிடிக்கப்பட்ட அகில உலக வறுமை ஒழிப்பு நாளையொட்டி தன் செய்தியை வழங்கிய பான் கி மூன், மக்களை அடிப்படை மூலதனமாகக் கொண்டு எழுப்பப்படும் பொருளாதாரமே உறுதியாக இருக்கும் என்று கூறினார்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளில் மக்களைப் புறந்தள்ளும் பல திட்டங்கள் வகுக்கப்படுகின்றன என்றும், இதனால், எளிய மக்கள் தங்கள் வேலைகளையும், நலக்காப்பீடுகளையும் இழக்கும் பேராபத்தில் உள்ளனர் என்றும் பான் கி மூன் தன் செய்தியில் சுட்டிக் காட்டியுள்ளார்.
அமெரிக்க ஐக்கிய நாடு பொருளாதாரச் சரிவிலிருந்து மீண்டுவருவதாகத் தெரிந்தாலும், அந்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் 60 இலட்சம் மக்கள் வேலைகளை இழந்து வறுமைக் கோட்டிற்குக் கீழ் தள்ளப்பட்டுள்ளனர் என்றும், இந்நிலை கடந்த 50 ஆண்டுகளில் அந்நாடு சந்தித்துள்ள மிக மோசமான ஒரு நிலை என்றும், ஐ.நா.வின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதாரம் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள Magdalena Sepúlveda கூறினார்.








All the contents on this site are copyrighted ©.