2011-10-17 15:45:10

விசுவாச ஆண்டு : அக்டோபர் 11, 2012 - நவம்பர் 24, 2013


அக்.17,2011. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கியதன் 50ம் ஆண்டை முன்னிட்டு விசுவாச ஆண்டை அறிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
புதிய நற்செய்தி அறிவிப்பாளர்க்கென வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் இஞ்ஞாயிறு காலை திருப்பலி நிகழ்த்தி ஆற்றிய மறையுரையில் இந்த விசுவாச ஆண்டை அறிவித்தார் திருத்தந்தை.
இந்த ஆண்டானது, 2012ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி தொடங்கி கிறிஸ்து அரசர் பெருவிழாவாகிய 2013ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி நிறைவடையும்.
முழுமையாக மனம் மாறிக் கடவுளிடம் தன்னை அர்ப்பணிக்கும் திருஅருளின் மற்றும் அர்ப்பணத்தின் காலமாகவும், அவரில் நம் விசுவாசத்தை உறுதிப்படுத்தி மகிழ்ச்சியோடு அவரை அறிவிக்கும் காலமாகவும் மனிதரைப் பாலைவன வாழ்விலிருந்து வெளியே கொணருவதற்கு அகில உலகத் திருச்சபையின் பணிக்கு புதிய உந்துதலைக் கொடுப்பதாகவும் இவ்வாண்டு இருக்கும் எனக் கூறினார் திருத்தந்தை .
மேலும், ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த சுமார் நாற்பதாயிரம் திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இந்த விசுவாச ஆண்டு குறித்தத் திட்டங்களை விளக்கினார்.
திருச்சபையின் பணியானது கிறிஸ்துவைப் போன்று கடவுளின் இறையாட்சியை நினைவுகூர்ந்து கடவுள் பற்றிப் பேசுவதாகும், குறிப்பாக தங்களது தனித்துவத்தை இழந்திருக்கும் கிறிஸ்தவர்களுக்குக் கடவுள் பற்றி எடுத்துரைப்பதாகும் என்றும் அவர் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.