2011-10-17 16:10:35

வாரம் ஓர் அலசல் - பொறுத்தது போதும், பொங்கியெழு


அக்.17,2011. அக்டோபர் 15, இச்சனிக்கிழமை உலகளாவிய "வெஞ்சின நாள்". உலகளாவிய நிதிக்கட்டமைப்பின் அநீதிகளை எதிர்த்துப் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய நாள். உலகப் பொருளாதாரம் சீர்கேடு அடைவதற்குக் காரணமான முதலாளித்துவம், சமத்துவமின்மை, வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகளைக் கண்டித்து கிழக்கு ஆசியா முதல் ஐரோப்பா, வட அமெரிக்கா என 80 நாடுகளின் 951 நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்த நாள். செல்வந்தர்களுக்கு மட்டுமே பயன்படும் வகையில் தீட்டப்படும் அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பொருளாதாரத் திட்டங்களுக்கு எதிராக நியுயார்க்கிலுள்ள வால் தெருவை மையமாக கொண்டு வாரக்கணக்கில் இடம் பெற்று வரும் மக்கள் போராட்டம் உலகளாவியப் போராட்டமாக வெடித்துள்ளது. அமெரிக்கப் பொருளாதாரச் சரிவின்போது வங்கிகளுக்கு ஊக்கத்தொகை அளித்த அரசு, அதேசமயம் வேலை இழந்தோரைத் தவிக்க விட்டுவிட்டது என்பதே இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரின் முக்கியமான குற்றச்சாட்டு! நாட்டின் செல்வம் ஒரு விழுக்காட்டினரிடம் குவிந்து கிடக்கின்றது என்பது மற்ற 99 விழுக்காட்டினரின் ஆதங்கம்.
ஆயினும் இந்த ஆர்ப்பாட்டம் இத்தாலியத் தலைநகர் உரோம் நகருக்கு மட்டும் கறுப்பு நாளானது. உலகின் மற்ற நகரங்களில் இச்சனிக்கிழமைப் போராட்டம் அமைதியான முறையில் நடந்திருக்க உரோமையில் மட்டும் இது வன்முறையாக இருந்தது. உரோமையிலும் சுமார் 2 இலடசத்து 50 ஆயிரம் பேர் அமைதியான முறையில் இந்தப் பேரணியை நடத்த, மூர்க்கத்தனமான சில கும்பல்களின் நடத்தைகளால் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. வங்கிகள் உடைக்கப்பட்டன, கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. புனிதர்கள் மார்செலினோ, பியத்ரோ என்ற 18ம் நூற்றாண்டு கத்தோலிக்க ஆலயம் நாசப்படுத்தப்பட்டு அங்கிருந்த அன்னைமரியா திருவுருவம் தெருவில் போட்டு உடைக்கப்பட்டது. 105 காவல்துறையினர் உட்பட 135 பேர் படுகாயமடைந்துள்ளனர். உரோம் நகரின் பல தெருக்களில் வெடிக்காத பெட்ரோல் வெடிகுண்டுகள் காணப்பட்டதாகக் காவல்துறை கூறியது. இந்த வன்முறைச் செயல்களைக் கண்டித்துப் பேசிய உரோம் மேயர் Gianni Alemanno, “இந்த மிருகங்களின் வன்செயல்களால் பொதுச் சொத்துக்களுக்கு மட்டும் 16 இலட்சத்துக்கு அதிகமான யூரோக்கள் இழப்பு என்றும், இந்தக் கடுஞ்சினத்தின் ஒழுக்கரீதி இழப்பின் துன்பத்தைத் தலைநகர் நீண்ட காலத்திற்கு அனுபவிக்க வேண்டியிருக்கும்” என்றும் கூறினார். இத்தாலிய பிரதமர் சில்வியோ பெருலுஸ்கோனி, "இந்த வன்முறைக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக ஒவ்வொருவரும் தயவு தாட்சண்யமின்றி கண்டனம் தெரிவிக்க வேண்டும்" என்று தெரிவித்தார். La Stampa என்ற இத்தாலிய தினத்தாள் “இவ்வன்செயலை நினைத்து நாம் ஒவ்வொருவருமே வெட்கப்பட வேண்டும்” என்று கூறியது. உரோம் நகரில் வாழும் சாதாரண குடிமக்களோ, “ஒரு பண்பட்ட சமுதாயத்தில் இத்தகைய செயல்கள் நடக்கவே கூடாது, நடப்பதற்கு அனுமதிக்கவும் கூடாது” என்று சொல்கிறார்கள்.
அன்பு நேயர்களே, இந்தியாவில் இந்த ஆர்ப்பாட்டம் இம்மாதம் 29ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தினத்தாளில் வாசித்தோம். வட ஆப்ரிக்க நாடான டுனிசியாவில் அரசின் ஆண்டுக்கணக்கான சர்வாதிகாரத்தை எதிர்த்து இந்த 2011ம் ஆண்டு சனவரியில் பொது மக்களின் கிளர்ச்சி தொடங்கியது. அதைத் தொடர்ந்து எகிப்து, லிபியா, ஏமன், சிரியா என அவை பரவின. கடந்த செப்டம்பர் 17ம் தேதி "வால் தெரு ஆக்கரமிப்பு இயக்கம்' நியுயார்க்கில் ஆர்ப்பாட்டத்தைத் துவக்கியது. தற்போது இது அந்நாட்டின் நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் நடந்து வருகிறது. உரோமையில் நடைபெற்ற இந்த வன்முறையை நேரில் பார்த்த போது மக்களின் ஆர்ப்பாட்டத்திற்கான காரணத்தை உணர முடிந்தது. இலண்டன், Frankfurt, மத்ரித், லிஸ்பன், ஜோகன்னஸ்பர்க், டோக்கியோ, தாய்பேய், செயோல், ஏதென்ஸ், கோலாலம்பூர் போன்ற பல முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டக்காரர் சிலர் கூறியுள்ள கருத்துக்கள் நமது புரிதலை விரிவுபடுத்தியது. அவர்கள் சொல்கிறார்கள் .... இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்
பெரிய தொழில் நிறுவனங்களின் பேராசை என்று சொல்லப்படும் விடயத்துக்கு எதிராக...
நிதிக்கட்டமைப்பில் காணப்படும் அநீதிகளுக்கு எதிராக....
உலகின் செல்வம் ஒரு சிலரின் கைகளில் முடங்கிக் கிடப்பதற்கு எதிராக.....
ஒரு சில தொழில் நிறுவனங்களின் ஏகபோகம் சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை வெகுவாகக் குறைப்பதால் அந்த நிறுவனங்களுக்கு எதிராக....
பெரும் நிறுவனங்கள் உலகின் செல்வத்தை கபளீகரம் செய்துள்ளதற்கு எதிராக.....
என்று பட்டியல் தொடர்கின்றது. நியுயார்க் மாநில பல்கலைக்கழக மாணவி ஒருவர் கூறுகிறார், "தொழிலாளர்களின் வருமானங்கள் சரிகின்றன என நான் அறிகிறேன். பள்ளிக்குச் செல்லுதல், இரு வேலைகள் பார்த்தல் என்பதுடன் நான் போராடி வருகிறேன். என்னுடைய கடன்களைத் தீர்ப்பதற்கும், கல்லூரியில் வாழ்வதற்கும், என்னுடைய புத்தகங்களை வாங்குவதற்குப் பணம் கொடுப்பதற்கும் நான் உழைத்தே தீரவேண்டும். நான் நாடக அரங்குத்துறை பற்றிக் கற்கிறேன். நான் ஒரு நடிகை, எழுத்தாளர், ஓவியர் மற்றும் இசைக்கலைஞர். நான் நாடக அரங்கத்தை நேசிக்கிறேன், அது தோற்றுவிக்கும் வாய்ப்புக்களை நேசிக்கிறேன். ஆனால் நான் பட்டப்படிப்பை முடிப்பதற்குள் எனக்கு 20,000 டாலர் கடன் தேவைப்படும்; ஆனால் இன்னும் அதிகக் கடன் உள்ள மாணவர்களைவிட இது பரவாயில்லை என்று பலரும் கூறுகின்றனர். என் நண்பர்கள் சிலருக்கு 50,000 டாலர் அல்லது 60,000 டாலர் என்று கடன் உண்டு".
இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், "இதுவரை பொறுத்திருந்தது போதும், நாங்கள் உண்மையான சனநாயகத்தை விரும்புகிறோம். அது பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் வங்கி அமைப்புகளின் ஆதாயத்தின் அடிப்படையில் அமைந்த சனநாயகம் அல்ல", "இந்தப் போராட்டம் எங்களுக்குத் தீர்வைத் தராது என்ற பயமும் இருக்கின்றது. ஆனால் அரசுகள் எங்களது கடன்களையும் பணப்பற்றாக்குறையையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலே போதுமானது. மேலும், உலகின் நிதிக்கட்டமைப்பு இன்னும் உறுதியானதாக இருக்க வேண்டும், பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசுகளின் சர்வாதிகாரப் போக்கு ஒழிய வேண்டும், எங்களுக்கு சனநாயக உரிமைகள் வழங்கப்பட வேண்டும், அரசியல்வாதிகளிடமும் செல்வந்தர்களிடமும் சட்டம் ஒழுங்கு செயல்படுத்தப்பட வேண்டும்" என்றும் சொல்கிறார்கள்.
சர்வதேச அளவில் மக்கள் எதிர்நோக்கும் இந்தப் பொருளாதார நெருக்கடியினால் பசியினாலும் குணமாக்கக்கூடிய நோய்களாலும் எத்தனையோ மக்கள் தினமும் இறக்கின்றனர். இஞ்ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்பட்ட உலக உணவு தினத்தையொட்டி அறிக்கை வெளியிட்ட ஐக்கிய நாடுகள் நிறுவனம், உலகில் 85 கோடிப்பேர் பசியாலும், ஊட்டச்சத்து குறைவாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 82 கோடிப் பேர் வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள். ஆண்டு தோறும் பட்டினியால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை மூன்று கோடியே 50 இலட்சத்துக்கும் அதிகம் என்ற விபரங்களை வெளியிட்டது. “உணவு விலை - நெருக்கடியில் இருந்து உறுதித்தன்மை” என்ற மையக் கருத்தோடு இத்தினம் கடைபிடிக்கப்பட்டது.
அடுத்த வேளை உணவு கிடைக்குமா? என்ற ஏக்கத்தில் இருப்பவர்களும் உலகில் இருக்கத்தான் செய்கின்றனர். ஏழைகளுக்கு மூன்றுவேளை உணவு என்பது மிகவும் கடினமான விடயமாகிறது., 2010-2011ம் ஆண்டில் உணவுப் பொருட்களுக்கான விலை ஏற்றத்தால் உலகம் முழுவதும் சுமார் 7 கோடிப்பேர் வறுமைக் கோட்டிற்குக்கீழ் தள்ளப்பட்டுள்ளனர் என உலக வங்கி தெரிவித்துள்ளது. உலகில் வாழும் அனைவருக்கும் தேவையான உணவு இருந்தாலும் அதைப் பெறும் அளவு பணம் இல்லாததால் சுமார் நூறு கோடிப்பேர் தினமும் பசியோடு தூங்கச் செல்கின்றனர். இப்படிப் பசியாய் இருப்போரில் 98 விழுக்காட்டினர் வளரும் நாடுகளில் உள்ளனர். எனவேதான் பொறுத்தது போதும், பொங்கியெழு என்று மக்கள் வீதிகளில் வந்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சனவரியில் டுனிசியாவில் தொடங்கிய இந்தப் போராட்டங்கள் பணக்கார நாடுகளின் தெருக்களிலும் இடம் பெற்று வருகின்றன என்றால் உலகில் சாதாரண மக்களின் நிலையை நாம் ஊகித்துக் கொள்ளலாம். இந்த அக்டோபரில் உலக மக்கள்தொகை 700 கோடியை எட்டும். உலகின் பசியை அகற்றுவதற்குப் போதுமான அறிவும் வளங்களும் உலகில் இருக்கின்றன. எனவே நாடுகள் இதனைக் கருத்தில் கொண்டு செயல்படுமாறு ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூனும் இவ்வுல உணவு தினச் செய்தியில் கூறியுள்ளார்.
கம்போடியாவில் எய்ட்ஸ் நோய்க் கிருமிகளால் தாக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பசியால் வாடுகின்றனர். ஆப்ரிக்காவின் கொம்பு நாடுகளில் கடந்த 60 ஆண்டுகளில் இவ்வாண்டில் ஒரு கோடியே 30 இலட்சத்துக்கு மேற்பட்டோர் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே போராட்டங்கள் நிறுத்தப்பட, ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும், மக்களின் பசிக்கொடுமை அகற்றப்பட வேண்டும், வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும், ஒரு சிலரின் கைகளில் முடங்கிப் போயுள்ள செல்வம் வெளியில் கொணரப்பட்டு வங்கிகளில் போடப்பட்டுள்ள கறுப்புப் பணங்கள் பொது மக்கள் நலனுக்கென செலவழிக்கப்பட வேண்டும்.
உலகின் மிகப் பெரிய செல்வந்தரான பில்கேட்சின் சொத்து மதிப்பு 250 பில்லியன் டாலர். ஒரு பில்லியன் என்பது இன்றைய நிலவரப்படி சுமார் 4,800 கோடி ரூபாய். உலகின் மூன்று பெரும் பணக்காரர்களின் சொத்தின் மதிப்பு மிகவும் பின்தங்கிய நாடுகளின் மொத்த உற்பத்தி மதிப்பைவிட அதிகம். உலகின் 225 மிகப் பெரிய பணக்காரர்களின் கையிருப்பு உலக ஏழை மக்கள் 250 கோடிப் பேரின் மொத்தக் கையிருப்பைவிட அதிகம் என்று ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. இந்த நிலையைப் பொருளாதார விடுதலை எனக் கூற முடியுமா?
கி.பி.79ம் ஆண்டில் தென் இத்தாலியிலுள்ள வெசுவியுஸ் என்ற எரிமலைவெடித்த போது பொம்பெய், Herculaneum ஆகிய நகரங்கள் எரிமலைக் குழம்பில் புதைந்து அழிந்தன. அந்த இடிபாடுகளை ஆய்வு செய்த போது ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அப்பெண்ணின் கால்கள் எதையோ எடுப்பதற்காக முயற்சி செய்ததைக் கண்டறிந்தார்கள். அதேபோல் அவளது கையொன்று ஒரு பையின் ஓரத்தைத் தொட்டுக் கொண்டிருந்ததாம். அந்தப் பையினுள் முத்துக்கள் இருந்ததும் கண்டறியப்பட்டது. அன்பர்களே, மரணம், வாசலருகில் வந்த போதும் முத்தைத் தேடியிருக்கும் அந்தப் பெண் கொஞ்சம் வித்தியாசமானவர் தானே. பொருளாசையும் பணத்தாசையும் நம்மை முழுமையாக ஆட்கொள்கிற போது நமது உயிரையும் இழக்க நேரிடுகிறது. இந்தப் பண ஆசை, உயிரைவிட மேலானது இல்லை என்ற அறிவையும் மழுங்கச் செய்து விடுகிறது.
எவ்விதப் பொருளாசையும் உங்களை ஆட்கொள்ளாதிருக்கட்டும் என்று வேதம் சொல்கிறது. அந்த ஆசைக்கு அடிமையானால் அதனால் பாதிக்கப்படுவோர் பொறுத்திருக்க மாட்டார்கள், பொங்கி எழுந்து பொசுக்குவார்கள். எச்சரிக்கை!







All the contents on this site are copyrighted ©.