2011-10-17 15:42:26

மத வன்முறை சம்பவங்களில் 3 ஆண்டுகளில் 427 பேர் பலி


அக்.17,2011. கடந்த மூன்று ஆண்டுகளில், இந்தியாவில் 2,420 மத வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், இவற்றில், 427 பேர் பலியாகியுள்ளனர் எனவும், உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2010ம் ஆண்டில், 651 மத வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து, அவற்றில் 114 பேர் பலியாகி, 2,115 பேர் காயம் அடைந்தனர் என்றும், 2009ல் நிகழ்ந்த 773 மத வன்முறைச் சம்பவங்களில், 123 பேர் இறந்து, 2,417 பேர் காயம் அடைந்தனர் எனவும், 2008ல் நிகழ்ந்த 656 மத வன்முறைச் சம்பவங்களில், 123 பேர் பலியாகினர் என்றும் புள்ளி விவரங்களை வெளியிடும் இந்திய உள்துறை அமைச்சகம், மத வன்முறைச் சம்பவங்களைக் கடுமையாகக் கையாளும்படி, மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டில், ஆகஸ்ட் மாதம் வரை, 338 மத வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், இவற்றில், 53 பேர் பலியாகி, 1,059 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, கடந்த செப்டம்பர் 14ம் தேதி, இராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்த வன்முறையில், 10 பேரும், அக்டோபர் 2ம் தேதி உத்தரகண்ட் மாநிலம், உதாம்சிங் நகர் மாவட்டத்தில் நிகழ்ந்த வன்முறையில், நான்கு பேரும் இறந்தனர் என புள்ளி விவரங்கள் மேலும் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.