2011-10-14 16:05:15

திருத்தந்தையின் அசிசிக் கூட்ட நிகழ்வுகள் வெளியிடப்பட்டுள்ளன


அக்.14,2011. அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் அசிசியில் முதன் முதலாக நடத்திய அமைதிக்கான பல்சமயச் செபக் கூட்டத்தின் 25ம் ஆண்டைச் சிறப்பிப்பதற்காக இம்மாதம் 27ம் தேதி அசிசி செல்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இந்த 25ம் ஆண்டின் நிகழ்வுகளில், சமய நம்பிக்கை இல்லாதவர்களும் பங்கு பெறுவார்கள் என இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்பவர்களில் ஒருவரான திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் இவ்வெள்ளிக்கிழமை கூறினார்.
இந்த அசிசி நிகழ்வானது செபத்தைப் பற்றி அல்ல, ஆனால் திருப்பயணம் பற்றி அழுத்தம் கொடுப்பதாக இருக்கும் என்று கர்தினால் டர்க்சன் மேலும் கூறினார்.
இக்கூட்டத்தில், ஆங்லிக்கன் பேராயர் ரோவன் வில்லியம்ஸ், லூத்தரன், இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபைகளின் பிரமுகர்கள், Constantinople முதுபெரும் தலைவர் முதலாம் பர்த்தலோமேயோ, சைப்ரஸ் ஆர்த்தடாக்ஸ் பேராயர், மாஸ்கோ முதுபெரும் தலைவருக்கு நெருக்கமானவர், இன்னும், யூதம், இசுலாம், இந்து, புத்தம், இயற்கையை வழிபடுவோர் என சுமார் 100 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த அசிசிக் கூட்டத்தையொட்டி இம்மாதம் 26ம் தேதி வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் மாலை செபவழிபாடு நடைபெறும் எனவும் கர்தினால் அறிவித்தார்.
1986ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி அசிசியில் நடை பெற்ற வரலாற்று சிறப்புமிக்க அமைதிக்கான பல்சமயச் செபக் கூட்டத்தைத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் சிறப்பிக்கும் நிகழ்வுகள் குறித்த மேலும் பல விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.







All the contents on this site are copyrighted ©.