2011-10-14 15:59:56

திருத்தந்தை : அரசுப் பணிகளைச் செய்வோருக்கு கிறிஸ்தவ விழுமியங்கள் புதிய உந்து சக்தியைத் தருகின்றன


அக்.14,2011. மனிதர் அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு உதவும் உறுதியான அறநெறி விழுமியங்களின் அடிப்படையில் சமூதாயத்தைக் கட்டி எழுப்புவதற்கு நாட்டின் பிற நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட கத்தோலிக்கத் திருச்சபை விரும்புகிறது என்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இத்தாலி ஒன்றிணைந்த நாடாக உருவானதன் 150ம் ஆண்டையொட்டி உள்துறை அமைச்சர் ரொபெர்த்தோ மரோனி தலைமையில் சுமார் 200 அரசு அதிகாரிகளை இவ்வெள்ளிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, அரசுப் பணிகளைச் செய்வோருக்கு கிறிஸ்தவ விழுமியங்கள் புதிய உந்து சக்தியையும் புத்தூக்கத்தையும் தருகின்றன என்றும் கூறினார்.
எந்த அதிகாரமும் கடவுளிடமிருந்து வருகின்றது என்பதால் அரசுப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மனிதருக்குப் பணி செய்யும் போது அந்தக் கடவுளுக்கேப் பணி செய்கிறோம் என்பதை நினைவில் கொண்டவர்களாய், மிகுந்த மதிப்போடும் பொறுப்புணர்வோடும் நடந்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
அரசு அதிகாரிகளின் ஒவ்வொரு நாளையப் பணியும், நீதி அமைதி சுதந்திரம் பொது நலன் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தவையாய் இருக்க வேண்டும் எனவும் கூறிய திருத்தந்தை, இவர்கள் பொது மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதை ஒருபோதும் மறக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தினார்.







All the contents on this site are copyrighted ©.