2011-10-14 16:04:16

இலத்தீன் அமெரிக்க நாடுகள் சுதந்திரம் அடைந்ததன் 200ம் ஆண்டு விழாத் திருப்பலியைத் திருத்தந்தை நிகழ்த்துவார்


அக்.14,2011. இலத்தீன் அமெரிக்க நாடுகள் சுதந்திரம் அடைந்ததன் 200ம் ஆண்டைச் சிறப்பிக்கும் விதமாக, வருகிற டிசம்பர் 12ம் தேதி வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் திருத்தந்தை திருப்பலி நிகழ்த்துவார் என்று திருப்பீட இலத்தீன் அமெரிக்க அவை அறிவித்தது.
இலத்தீன் அமெரிக்கப் பாதுகாவலியான குவாதாலூப்பே (Guadalupe) அன்னைமரியா விழாவான டிசம்பர் 12ம் தேதி இத்திருப்பலியை நிகழ்த்துவதற்குத் திருத்தந்தை மகிழ்வுடன் ஒத்துக் கொண்டார் என்று அந்த அவை வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
இலத்தீன் அமெரிக்காவில் பெரு மற்றும் பிரேசில் நாடுகளைத் தவிர மற்ற நாடுகளின் இந்த 200ம் ஆண்டுக் கொண்டாட்டங்கள் 2010க்கும் 2014ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இடம் பெறுகின்றன. பெருவும் பிரேசிலும் 2020க்கும் 2022க்கும் இடைப்பட்ட காலத்தில் சிறப்பிக்கின்றன என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
இலத்தீன் அமெரிக்க நாடுகளின் சுதந்திரப் போராட்டங்கள் 1808ம் ஆண்டிலிருந்து 1824ம் ஆண்டு வரை இடம் பெற்றன என்று கூறும் அத்திருப்பீட அறிக்கை, ஹெய்ட்டி நாடு 1804ம் ஆண்டிலும் கியூபா நாடு 1898ம் ஆண்டிலும் விடுதலை அடைந்ததையும் குறிப்பிட வேண்டும் என்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.