2011-10-14 08:31:41

அக்டோபர் 14 வாழ்ந்தவர் வழியில்.... அய்மே ஆர்கண்ட்


அய்மே ஆர்கண்ட் என்பவர் (Aimé Argand) சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓர் இயற்பியலாளரும், வேதியியலாளரும் ஆவார். இவர் எண்ணெய் விளக்கின் வடிவமைப்பைப் பெருமளவு மேம்படுத்தியவர். இவர் புதிதாக வடிவமைத்த எண்ணெய் விளக்கு இவரது பெயரைத் தழுவி ஆர்கண்ட் விளக்கு என அழைக்கப்பட்டது. பிரான்சுவா பியேர் அமி ஆர்கண்ட் என்ற இவர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் 1750ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி பத்து பிள்ளைகளுள் ஒன்பதாவதாகப் பிறந்தார். இவரது தந்தை ஒரு கைக் கடிகாரம் செய்பவர். அய்மே ஆர்கண்ட் குருவாக ஆகவேண்டும் என அவரது தந்தை விரும்பினார். ஆனால் இவருக்கு அறிவியல் மீதே அதிக ஆர்வம் இருந்தது. இதனால், புகழ் பெற்ற இயற்பியலாளரும், காலநிலையியலாளருமான ஹோராஸ் பெனெடிக்ட் தெ சவ்சுரே என்பவரிடம் மாணவராகச் சேர்ந்தார். இவர் தனது இருபதுகளின் பிற்பகுதியில் பாரிசில் இருந்தபோது காலநிலையியல் தொடர்பான பல கட்டுரைகளை வெளியிட்டார். பின்னர் இவர் வேதியியல் ஆசிரியராகப் பணியேற்றுக் கொண்டார். பிராந்தி தயாரிக்கும் முறையை மேம்படுத்திய இவர் தனது சகோதரருடன் இணைந்து வடிசாலை ஒன்றை அமைத்தார். அய்மே ஆர்கண்ட், 1803ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி காலமானார்.








All the contents on this site are copyrighted ©.