2011-10-14 15:45:34

அக் 15, 2011. வாழ்ந்தவர் வழியில் .... அப்துல் கலாம்


‘கற்றலின் ஓர் அங்கமாக தவறுகளை நாம் அனுமதிக்க வேண்டும். தவறுகளே செய்யக்கூடாது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. துணிச்சலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம்’, என்றவர் அப்துல் கலாம்.
'இந்தியாவின் ஏவுகணை மனிதர்' என அழைக்கப்படும் பாரதத்தின் 11வது குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் 80 வது பிறந்த நாள் இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்படுகின்றது. தமிழகத்தின் இராமேஸ்வரத்தில் அக்டோபர் 15ம் தேதி பிறந்த இவர், ஒரு சிறந்த அறிவியல் மேதை மற்றும் பொறியியலாளர். 2002ம் ஆண்டு முதல் 2007 வரை இந்திய குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம், அதற்கு முன்னரே இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம பூஷன், பத்ம விபூஷன், பாரத் இரத்னா ஆகிய விருதுகளைப் பெற்றிருந்தார். இது தவிர, பல்வேறு பல்கலைக்கழகங்கள், அமைப்புகள் மற்றும் நிறவனங்கள் எண்ணற்ற விருதுகளை வழங்கி இவரை கௌரவித்துள்ளன.
இளைய சமுதாயத்தை வடிவமைக்கும் சிற்பியாக அப்துல் கலாம் கொண்டாடப்படுகிறார். பிரமிப்பூட்டக்கூடிய எளிமை, கைகூப்பச் சொல்லும் அறிவியல் திறன், குடியரசுத்தலைவரான பின்பும் மக்களைவிட்டு விலகாத பாங்கு என்பவை அப்துல் கலாமின் சிறப்பான பண்புகள்.
வருங்கால இந்தியா இளைஞர் கையிலேயே உள்ளது என்பதைத் தெளிவாக உணர்ந்தவராக, இளையோரையும் சிறார்களையும் ஊக்குவிப்பதில் அதிக ஆர்வம் காட்டும் இவர், இப்போதும் பல பல்கலைக்கழகங்களில் பகுதி நேரப் பேராசிரியராகப் பணிபுரிகின்றார்.








All the contents on this site are copyrighted ©.