2011-10-13 15:48:23

கூடங்குளத்தில் இரவு பகலாக தொடர் மறியல் போராட்டம் நடத்த திட்டம்


அக்.13,2011. கூடங்குளம் அணுமின் உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி மக்கள் மீண்டும் தங்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இவ்வியாழனன்று நடந்த ஆலோசனையில் அணு உலை வாசலில் தொடர்ந்து மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அணு உலை திட்டத்தை வாபஸ் வாங்கும் வரை பின்வாங்கப் போவதில்லை என போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
கூடுதல் மின்சாரம் தரும் திட்டமான அணு உலை இரஷ்ய நாட்டு ஒத்துழைப்புடன் 90 விழுக்காடு பணிகள் முடிந்து துவங்கும் நிலையை எட்டியுள்ளது. ஆனால் இதன் பாதுகாப்புத் தன்மை குறித்து எழுந்துள்ள சந்தேகஙகளால் இப்பகுதி மக்கள் அணு உலை திறக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கடந்த மாதம் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்ட இப்பகுதி மக்கள், அணுஉலைப் பணிகளை நிறுத்தி வைக்க மத்திய அரசை மாநில அரசும் கோரும் என்று தமிழக முதல்வர் அளித்த உறுதியின் அடிப்படையில் போராட்டத்தை நிறுத்திக்கொண்டனர்.
அணு உலைப் பணிகள் நிறுத்தப்படாது என மத்திய அரசு அண்மையில் கூறியதையடுத்து, ஞாயிறு முதல் மீண்டும் போராட்டம் துவங்கியிருக்கிறது. கூடங்குளம் அணு உலை இருக்கும் பகுதியில் இவ்வியாழனன்று ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.