2011-10-12 16:01:47

வத்திக்கானில் நற்செய்தியின் புதிய அறிவித்தல் கருத்தரங்கு நடைபெறும்


அக்.12,2011. நற்செய்தியின் புதிய அறிவித்தலுக்கென உருவாக்கப்பட்டுள்ள பாப்பிறை அவை, வருகிற சனிக்கிழமை மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்கள் வத்திக்கானில் கருத்தரங்கு ஒன்றை நடத்த உள்ளது.
உலகெங்கும் நற்செய்திப் பணியில் ஈடுபட்டிருக்கும் பல்வேறு தலைவர்கள் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்வர் என்று இந்த பாப்பிறை அவையின் தலைவரான பேராயர் Salvatore Fisichella கூறினார்.
கருத்தரங்கில் கலந்து கொள்ள வருகைதரும் பன்னாட்டு அங்கத்தினர்களை வருகிற சனிக்கிழமை திருத்தந்தை வரவேற்று உரையாற்றுவார். பின்னர் ஞாயிறன்று புனித பேதுரு பசிலிக்காவில் அவர்களுக்கு ஒரு சிறப்புத் திருப்பலியைத் திருத்தந்தை ஆற்றுவார்.
கருத்தரங்கில் உரையாற்றும் பலரில், இத்தாலியைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் அறிவியலுக்கும் விசுவாசத்திற்கும் இடையே உருவாகவேண்டிய உரையாடல் குறித்து பேசுவார் என்றும், கொலொம்பியா நாட்டு ஆயர் ஒருவர் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் நடைபெறும் நற்செய்தி அறிவிப்புப் பணி குறித்து பேசுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
"கடவுளின் வார்த்தை மேன்மேலும் பரவியது" என்று திருத்தூதர் பணியில் காணப்படும் வார்த்தைகள் வத்திக்கானில் நடைபெறும் நற்செய்தியின் புதிய அறிவித்தல் கருத்தரங்கின் மையக் கருத்தாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.