2011-10-12 16:03:15

'பசிக்கொடுமைக்கு செல்வம் மிகுந்த நாடுகளே காரணம்'


அக்.12,2011. உலகின் வறிய பகுதிகளில் நிலவும் பசிக்கொடுமைக்கு மனிதர்களின் நடவடிக்கைகளே காரணம் என்று உணவுக் கொள்கை குறித்த முன்னணி அறிவாளிகள் விடுத்துள்ள புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.
அதிகமான விவசாய நிலங்கள் தாவர எரிபொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுதல், காலநிலை மாற்றம் தரும் அதிர்ச்சி ஆகியன, வறிய மக்களை பட்டினி உலகில் தொடர்ந்து வைத்திருப்பதாக அமெரிக்காவிலிருந்து செயற்படும் சர்வதேச உணவு கொள்கைகளுக்கான ஆய்வு நிறுவனம் என்னும் அமைப்பு கூறியுள்ளது.
வறிய நாடுகளில், அதிலும் பெரும்பாலும் சஹாரா பாலைவனத்துக்கு தெற்கே இருக்கும் நாடுகளில் பட்டினி நிலைமை மோசமடைவதற்கு செல்வம் மிகுந்த நாடுகளின் செயற்பாடுகளே காரணம் என்று அந்த அறிக்கை தெளிவாகக் கூறுகிறது.
இதில் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற செல்வந்த நாடுகள் தாவர எரிபொருட்களுக்கான அதிகாரபூர்வ இலக்கை அதிகரிப்பதும் உள்ளடங்குகிறது. இதனால், ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் உணவுப் பயிர்களுக்கென பயன்படுத்தப்பட்டு வந்த நிலங்களில் தாவர எரிபொருளுக்கான பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
அதேவேளை காங்கோக் குடியரசு போன்ற சில நாடுகளில் காணப்படும் கொடிய பஞ்சத்துக்கு உள்நாட்டுப் போர்களும் காரணம் என்பதையும் அது சுட்டிக்காட்டுகிறது.
ஒட்டுமொத்தமாக உலகளவில் 1990 ஆண்டு முதல் பட்டினியால் வாடுவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டதற்கு தென்கிழக்காசியாவிலும், தெற்கு அமெரிக்காவிலும் ஏற்பட்ட விளைச்சல் அதிகரிப்பே காரணம் என்றும் இந்த ஆண்டறிக்கை கூறுகிறது.
ஆனால், தற்போது சஹாரா பாலைவனத்துக்கு தெற்கே உள்ள ஆப்பிரிக்க நாடுகளில்தான் அதிகமான அளவு பசிக்கொடுமை தாக்கப் போகிறது என்றும், ஆனால் அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் அந்த நாடுகளின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
ஆப்பிரிக்காவைப் பொறுத்தவரை கானா நாடு மட்டும் விதி விலக்காக இருப்பதாகவும், பட்டினியை குறைப்பதில் அந்த நாடு வெற்றி கண்டிருப்பதாகவும் அது கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.