2011-10-12 16:02:31

பங்களாதேஷ் பணியாளர்களுக்கு சவுதி அரசு நிறைவேற்றிய மரண தண்டனைக்கு ஆயர் கண்டனம்


அக்.12,2011. நாம் வாழும் 21ம் நூற்றாண்டில், சவுதி அரேபிய அரசு இன்னும் ஒருவரது தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றுவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத பெரும் கொடூரம் என்று பங்களாதேஷ் ஆயர் ஒருவர் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை சவுதி அரேபிய அரசு பங்களாதேஷைச் சேர்ந்த எட்டுப் பணியாளர்களின் தலையை பொதுமக்கள் முன்னிலையில் வெட்டியது.
நான்கு ஆண்டுகளுக்கு முன், இந்த பங்களாதேஷ் பணியாளர்கள் எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒரு காவல் பணியாளரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டனர். பங்களாதேஷ் அரசு சவுதி அரசுக்கு அனுப்பிய பல்வேறு விண்ணப்பங்களை அந்நாடு ஏற்றுக் கொள்ளாமல் கடந்த வெள்ளியன்று தன் மரண தண்டனையை நிறைவேற்றியது.
சவுதியில் பணி செய்யச் செல்லும் ஆசிய நாட்டைச் சார்ந்த பணியாளர்களை மட்டும் கேவலமாக நடத்தும் போக்கை சுட்டிக்காட்டி பேசிய பங்களாதேஷ் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிப் பணிக்குழுவின் தலைவர் ஆயர் Gervas Rosario, ஐரோப்பா, அமெரிக்காவில் இருந்து அஙகு பணியாற்றச் செல்வோர் மதிப்புடன் நடத்தப்படுவதையும் குறிப்பிட்டுப் பேசினார்.
மனித உரிமைகள் அனைத்தையும் கேள்விக்குறியாக்கும் சவுதி அரசின் இந்தக் கொடுமையான மரணதண்டனை, பல்வேறு உலகளாவிய அமைப்புக்களின் கண்டனத்தைப் பெற்றுள்ளது.








All the contents on this site are copyrighted ©.