2011-10-12 15:46:26

அக் 13, 2011. – வாழ்ந்தவர் வழியில்.......


வியட்நாம் புரட்சியாளரும், படைத்தலைவரும், அரசியல்வாதியும், நொபெல் அமைதி விருதைப் பெறுபவராக அறிவிக்கப்பட்டவருமான Le Duc Tho, 1911ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி வியட்நாமின் ஹா நாம் மாநிலத்தில் பிறந்தார். 1930ல் இந்தோ-சீன கம்யூனிசக் கட்சியை நிறுவ உதவியவர் இவர். அந்த ஆண்டு முதல் 1936 வரையும், மீண்டும் 1939 முதல் 44 வரையும் ஃபிரெஞ்ச் காலனி ஆதிக்க ஆட்சியாளர்கள், இவரை சிறையிலடைத்தனர். 1945ல் இவர் விடுதலையான பின் ஃபிரெஞ்ச் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக வியட்நாம் விடுதலை இயக்கத்தை வழிநடத்தி 1954ல் ஜெனிவா அமைதி ஒப்பந்தம் கையெழுத்திட காரணமானார். கம்போடியா நாட்டிற்கான ஆலோசகராகவும் இவர் செயலாற்றினார். 1960களில் நடைபெற்ற வியட்நாம் போரில் அமெரிக்க ஐக்கிய நாடு கலந்துகொண்டபோது, பாரீஸில் பல சுற்று அமைதி பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டிருந்த அதே வேளையில், Le Duc Tho அமெரிக்க ஐக்கிய நாட்டுச் செயலர் ஹென்றி கிஸ்ஸிங்கருடன் இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, 1973ம் ஆண்டின் பாரீஸ் ஒப்பந்தம் வழி போர் நிறுத்தத்திற்கு ஆவன செய்தார். அமைதிக்கான இவரின் இப்பணிகளை கௌரவிக்கும் விதமாக 1973ல் இவருக்கும் கிஸ்ஸிங்கருக்கும் அமைதி விருதை வழங்குவதாக அறிவித்தது நொபெல் விருது நிறுவனம். ஆனால், 'அமெரிக்க ஐக்கிய நாட்டுடன் அமைதி ஒப்பந்தம் இடம்பெறவில்லை. நாங்களே போரை வென்றோம்' எனக் கூறி நொபெல் அமைதி விருதை வாங்க மறுத்துவிட்டார் Le Duc Tho. 1990ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி இவர் காலமானார்.








All the contents on this site are copyrighted ©.