2011-10-11 16:02:34

விவிலியத் தேடல்


RealAudioMP3 ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது! - திருப்பாடல் 84

அக்.11,2011. பேரரசர் ஒருவர் ஓவியர்களுக்கு ஓர் அழைப்பு விடுத்தார். “உலகமே போற்றும் ஓவியம் ஒன்றை வரைந்து தாருங்கள். அது ஆன்மீக ஓவியமாக அமைந்திருக்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார். அரசரின் அழைப்பை பல ஓவியர்கள் ஏற்றனர். அவர்களில் வயது முதிர்ந்த ஓர் ஓவியரும் இருந்தார். அவர் அரசரிடம், “நீங்கள் சொல்லும் ஓவியத்தை வரைய நான் தயார். ஆனால் எனக்கு மூன்று ஆண்டுகள் அவகாசம் தர வேண்டும். மேலும் நான் ஓவியம் வரைவதை யாரும் பார்க்கக் கூடாது” என்று சொன்னார். அரசர் அந்த ஓவியரின் நிபந்தனைகளுக்கு இணங்கி, எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார்.
மூன்று ஆண்டுகள் முடிந்த பின்னர், ஓவியம் தயாரானது. அரசர் பார்வையிடும் நாளும் வந்தது. மக்கள் வெள்ளமும் திரண்டது. பார்வையிட வந்த அரசர் அசந்து போனார். அந்த அறையின் சுவர்கள் அனைத்தும் ஓவியமாகியிருந்தது. சலனமற்ற ஆறு, ஆற்றங்கரையில் ஒற்றையடிப் பாதை, அது நேராகக் காட்டுக்குள் நுழைந்தது. பின்னணியில் மலைகளும், அடர்ந்த சோலைகளும் இருந்தன. இவற்றைப் பார்த்த அரசர் மணிக்கணக்கில் மெய்மறந்து நின்றார். அமைதியின் ஆழத்திற்கே போய்விட்டார். பின்னர் ஓவியரிடம், “அந்த ஒற்றையடிப் பாதை எங்கே செல்கின்றது?” என்று கேட்க, ஓவியரோ “வாருங்கள், போய்ப் பார்ப்போம்” என்று அரசரைக் கைபிடித்து அழைத்து ஓவியத்திற்கு அருகே சென்றார். என்ன ஆச்சரியம்... அந்த ஓவியத்திலிருந்த ஒத்தயடிப் பாதையில் இருவரும் நடக்க ஆரம்பித்தனர். மெல்ல மெல்ல நடந்து, இருவரும் மறைந்தே போயினர்.

ஆன்மீகம் இது போன்றதொரு அனுபவத்தைத் தரவல்லது. நாம் மனத்தால் காணும் உண்மையில் மெய்மறந்து கலக்கவும், ஒன்றிக்கவும் வைப்பது ஆன்மிகம். வேளாங்கண்ணி, பழனி, திருப்பதி, மெக்கா போன்ற திருத்தலங்களுக்குச் சென்றவர்கள் அனுபவமும் இப்படித்தான் இருக்கும். வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை திருத்தலத்தைத் தரிசிப்பதற்குச் செல்லும் கோடான கோடி பக்தர்கள், அந்த ஊரின் எல்லையில் காலடி வைத்ததுமே ஏதோ இனம்புரியாத ஒரு பரவசத்தை பெற்றதாகச் சொல்லியிருக்கின்றனர். செப்டம்பர் 8ம் தேதி நடைபெறும் அந்தத் தாயின் திருவிழாவையொட்டி, ஆகஸ்ட் மாத இறுதியில் கொடியேற்றி நவநாள் ஆரம்பித்தவுடனேயே, பல்லாயிரம் பக்தர்கள் ஒரு தவ முயற்சியாக நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடந்துவந்து அன்னையின் அருளைப் பெறுகின்றனர். சாரை சாரையாக நடந்து போகும் பக்தர்களைப் பார்க்கும் போது நாமும் பரவசம் அடைகிறோம். பக்தர்கள் ஆலயங்களில் மணிக்கணக்கில் அமர்ந்து கண்களை மூடி கண்ணீர் வடிப்பதைக் காணும் போது நம்மையும் அறியாமல் நாமும் கண் கலங்கிய நேரங்கள் உண்டல்லவா?

ஆலயங்கள், கோவில்கள், மசூதிகள் தரும் அமைதி, திருத்தலங்கள் தரும் நிம்மதி வார்த்தைகளுக்குள் அடங்காதது. கடந்த வாரத்தில் ஓர் அருட்சகோதரி உரோம் நகருக்கு முதன் முறையாக வந்திருந்தார். வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் அவர் முதல் அடியைப் பதித்தவுடன் முழந்தாளிட்டு, அந்தக் கல் தரையை முத்தமிட்டார். அன்புள்ளங்களே, நம்மில் பலருக்கு இவ்வாறான அனுபவங்கள் இருந்திருக்கின்றன. ஆலயங்களின் அமைதியில் ஆழ்ந்த அனுபவங்களைப் பெற்றதாக உங்களில் சிலர் எம்மிடம் பகிர்ந்து கொண்டது நினைவுக்கு வருகிறது.

அக்காலத்தில் இஸ்ரயேல் மக்களும் எருசலேம் ஆலயத்திற்குத் திருப்பயணம் சென்ற போது அவர்களின் அனுபவமும் இப்படித்தான் இருந்தது. அந்த மக்களுக்கென்று இருந்த ஒரே ஆலயம் எருசலேம் ஆலயம் மட்டுமே. இந்த ஆலயத்தைக் காண விரும்பிய ஒரு பக்தரோ அல்லது பலரோ தங்களது ஆவலைக் கூறுவதாகவும், ஆலயத்தைக் கண்டதும் ஆதவனைக் கண்ட தாமரை போல் மகிழ்ச்சியில் மனம் நிறைவதாகவும் எழுதப்பட்ட பாடல்தான் திருப்பாடல் 84. இதோ இந்தத் திருப்பாடலின் ஆரம்ப வரிகள்:
திருப்பாடல் 84: 1-4
படைகளின் ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது! என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது. என் உள்ளமும் உடலும் என்றுமுள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது. படைகளின் ஆண்டவரே! என் அரசரே! என் கடவுளே! உமது பீடங்களில் அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்துள்ளது. தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச் சிட்டுக் குருவிகளுக்குக் கூடும் கிடைத்துள்ளது. உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர். அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.

இந்த இஸ்ரயேல் மக்கள் தங்களைச் சிட்டுக் குருவிகளுக்கும் அடைக்கலான் குருவிகளுக்கும் ஒப்பிடுகின்றனர். பறவைகள் நெடுந்தொலைவிலிருந்து பறந்து வருவது போல இவர்களும் நீண்ட பயணம் செய்து ஆலயத்தைத் தரிசிப்பதைப் பாடுகின்றனர். பறவைகளுக்குத் தஞ்சம் கொடுக்கும் இறைவன் தமது மக்களுக்கு எவ்வளவு ஆசீரையும் அருளையும் அளிப்பார் என்று மனது உருகிப் பாடுகின்றனர். மத்தேயு நற்செய்தி 6:26ல், இயேசுவும் வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத்தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா?” என்று கேட்கிறார்.

இப்படித் திருப்பயணம் செல்லும் போது வழியில் ஆபத்துக்கள், மனத்தளர்ச்சி, பசிதாகம் களைப்பு ஆகியவை ஏற்படுகின்றன. சிலர் புனித பயணங்கள் செல்லும் வழியில் வாகன விபத்துக்களில் இறக்கும் செய்திகளையும் அவ்வப்போது கேட்கிறோம். இரவில் கொடிய விலங்குகளின் அச்சுறுத்தல்கூட இருக்கின்றது. ஆனாலும், ஆலயத்தைத் தரிசிக்க வேண்டுமென்ற பேராவலில் இந்த ஆபத்துக்கள் பெரிதாக நோக்கப்படுவதில்லை. இஸ்ரயேல் திருப்பயணிகள் பற்றி திருப்பாடல் 84ல் மேலும் வாசிக்கிறோம்...
திருப்பாடல் 84: 5-7
ஆண்டவரே, உம்மிடருந்து வலிமை பெற்ற மானிடர் பேறு பெற்றோர். அவர்களது உள்ளம் சீயோனுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது. வறண்ட பாக்காபள்ளத்தாக்கை அவர்கள் கடந்து செல்கையில், அது நீருற்றுகள் உள்ள இடமாக மாறுகின்றது. அவர்கள் நடந்து செல்கையில் மேலும் மேலும் வலிமை பெறுகின்றார்கள். பின்பு, சீயோனில் தெய்வங்களின் இறைவனைக் காண்பார்கள். படைகளின் ஆண்டவரே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்! யாக்கோபின் கடவுளே! எனக்குச் செவிசாய்த்தருளும்!

பயணம் எவ்வளவு கடினமாக இருந்தாலும் ஆலயத்தைப் பார்த்தவுடன் அத்தனை கஷ்டங்களும் ஆதவனைக் கண்ட பனிபோல் மறைந்து போகின்றன. எண்ணமும் ஏக்கமும் எல்லாமே ஆலயம்தான். இறைவன்தான். அதனால்தான் அம்மக்கள்...
திருப்பாடல் 84: 10
எங்கள் கேடயமாகிய கடவுளே... வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும் உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒருநாளே மேலானது. மாசற்றவர்களாய் நடப்பவர்களுக்கு நன்மையானவற்றை வழங்குவார் படைகளின் ஆண்டவரே! உம்மை நம்பும் மானிடர் நற்பேறு பெற்றோர்!

அன்பர்களே, நமது மானிட வாழ்க்கையும் ஒரு திருப்பயணம்தான். இப்பூமியில் நாம் எல்லாரும் பயணிகளே. யாருக்குமே இங்கு நிலையான இடம் இல்லை. ஆனால் இப்பயணத்தில் இறைவனை நம்பி வாழ்வோரது வாழ்க்கை பேறு பெற்றதாக அமையும். வாழ்க்கையில் பிரச்சனை என்று வந்து விட்டால் முதலில் நாம் யாரை நினைக்கிறோம்?, யாரிடம் சொல்கிறோம்?, யாரை அணுகுகிறோம்?.

இன்றைய உலகில் ஒவ்வொரு நாளும் புதுப்புது வடிவங்களில் பிரச்சனைகள் உருவெடுக்கின்றன. அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஒவ்வொரு 79 வினாடிகளுக்கும் ஒருவர் மற்றவரது சுய அடையாளங்களைத் திருடுகிறாராம். அதாவது மற்றவரது சமூகப் பாதுகாப்பு அட்டை எண்ணைத் திருடிப் பயன்படுத்துவது, மற்றவர் பற்றிய செய்திகளைச் சேகரிப்பது போன்ற திருட்டுக் குற்றங்களைச் செய்வதாக ஓர் அறிக்கை வெளியாகியுள்ளது. மேலும், அமெரிக்காவில் 50 விழுக்காட்டினருக்குத் தாங்கள் செய்யும் வேலையில் திருப்தி இல்லை. 80 விழுக்காட்டினர் தங்கள் உடல் தோற்றத்தில் மகிழ்ச்சியின்றி இருக்கின்றனர் என்றும் ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.

இந்தியாவில் தீவிர மனநோயால் சுமார் 3 விழுக்காட்டினரும் இலேசான மனநோயால் 10முதல் 15 விழுக்காட்டினரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டும் சுமார் 65 இலட்சம் பேர் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் மிகக் குறைவானவர்களே என்று உலக மனநல நாளான இத்திங்களன்று தகவல்கள் வெளியாகின. குடும்பப் பிரச்சனை, வேலையில்லா நிலை, ஏமாற்றம், பாலியல் பிரச்சனை, ஏக்கம், தோல்வி, பாதுகாப்பாற்ற உணர்வு, சந்தேகப் புத்தி, போட்டி, பொறாமை, தவறானச் சேர்க்கை, அதிகமான மது, போதைப் பொருள் பழக்கம் ஆகியவை இந்த மனநலப் பாதிப்புக்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. "ஒவ்வொரு மனநோயாளிக்கும் மிகவும் தேவையானது அவரை எந்த நிலையிலும் புரிந்து கொள்ளும் ஒரு நல்ல நண்பனே," என்று உளவியல் நிபுணர் கிளிபோர்ட் பியர்ஸ் சொல்கிறார்.

அன்பர்களே, அந்த நல்ல நண்பன் முதலில் இறைவனாகத்தான் இருக்க வேண்டும். அந்த இறைவனை நம்பும் மானிடர் நற்பேறு பெற்றோர். அந்த இறைவனில் தங்கள் வலுவான நம்பிக்கையை வைப்பவர் நற்பேறு பெற்றோர்.

ஒரு படைவீரன் தன் இளம் மனைவியுடன் படகில் சென்றுகொண்டிருந்தார். அவர்கள் கடலின் நடுவில் செல்லும்போது, திடீரென புயல் காற்று வீசியது. மனைவி மிகுந்த அச்சம் கொண்டார். வீரனோ அச்சமின்றி இருந்தார். "இந்தப் புயலில் நம் படகு மூழ்கப் போவதுபோல் உள்ளதே. உங்களுக்குப் பயமே இல்லையா?" என்று அந்தப் பெண் கேட்டார். வீரன் தான் வைத்திருந்த ஒரு கத்தியை எடுத்து, அந்தப் பெண்ணின் கழுத்துக்கருகே கொண்டு சென்றார். பின்னர், தன் மனைவியைப் பார்த்து, "இந்தக் கத்தியைப் பார்த்து உனக்குப் பயமில்லையா?" என்று கேட்டார். மனைவி அவரிடம், "பயமில்லை" என்று சொன்னார். "ஏன்?" என்று வீரன் கேட்டபோது, "என் மீது அதிக அன்பு கொண்டுள்ள உங்கள் கையில் இந்தக் கத்தி இருக்கிறது. அதனால் எனக்கு பயமில்லை." என்று சொன்னார் அந்தப் பெண். உடனே வீரன், "அதேபோல்தான் இந்தப் புயலும். நம்மீது அதிக அன்பு கொண்டிருக்கும் இறைவன் கையில் இருக்கும் ஓர் ஆயுதம் இந்த புயல். நாம் ஏன் பயப்பட வேண்டும்?" என்று சொன்னார்.

பிரச்சனை என்று வந்ததும் முதலில் இறைவனை நினைத்துப் பாருங்களேன். ஆலயங்கள் சென்று சிறிது நேரம் அமைதியில் இருந்து பாருங்களேன். அப்போது அந்த ஆலயம் தரும் மனநிம்மதி உங்களை நிச்சயம் நிறைக்கும். உங்கள் பிரச்சனைக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.

“ஆண்டவரே, உமது இல்லத்தில் வாழ்வோர் பேறு பெற்றோர். ஆண்டவரே, உம்மை நம்பும் மானிடர் நற்பேறு பெற்றோர்!”








All the contents on this site are copyrighted ©.