2011-10-11 15:06:08

காற்று மாசுபாட்டால் சிசு வளர்ச்சி பாதிப்படையும்: ஆய்வில் தகவல்


அக்.11,2011. காற்று மாசுபாடு, கர்ப்பத்தில் உள்ள சிசுவையும் பாதிக்கும் என்று வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஓர் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
2000 முதல் 2006ம் ஆண்டு வரை அதிகப் போக்குவரத்து உள்ள பகுதிகள், போக்குவரத்து மிதமாக உள்ள பகுதிகள் என, பல இடங்களில் இருந்து சுமார் ஆயிரம் கர்ப்பிணிகள் தேர்வு செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்ததன் மூலம் இந்த உண்மை தெரிய வந்துள்ளது.
இதில் அதிகப் போக்குவரத்து இருந்த பகுதிகளில் வசித்த கர்ப்பிணிகளுக்கு குறைந்த எடையிலேயே குழந்தைகள் பிறந்ததுடன், சிசு வளர்ச்சியும் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
காற்றில் கார்பன் மோனாக்சைடின் அளவு அதிகரிக்கும் போது காற்று மாசுபட்டு, இந்த மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டு, நுரையீரல் பாதிக்கப்படும் அபாயங்களும் உள்ள நிலையில், இத்தகைய காற்றை சுவாசிப்பதால் கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சி தடைபடுவதுடன், இதனால் ஆரோக்கியமான குழந்தை பிறப்பது கேள்விக்குறியாகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய குழந்தைகள் பிறக்கும்போது மற்ற குழந்தைகளைவிட சுமார் 58 கிராம் எடை குறைவாக உள்ளனர் எனவும் வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.