2011-10-10 15:38:05

கூடங்குளம் அணு மின் நிலையத்தின் கட்டுமானத்தை நிறுத்தும்படி அப்பகுதி மக்கள் மீண்டும் போராட்டம்


அக்.10,2011. தமிழ் நாட்டின் கூடங்குளம் பகுதியில் கட்டப்பட்டு வரும் அணுமின் நிலையத்தின் கட்டுமானத்தை நிறுத்தும்படி அப்பகுதி மக்கள் மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
தூத்துக்குடி ஆயர் யுவான் அம்புரோஸ் உட்பட கூடங்குளம் பகுதியிலிருந்து 12 பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழு ஒன்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சென்ற வார இறுதியில் சந்தித்தபின்னரும் சரியான முடிவுகள் காணப்படவில்லை என்ற காரணத்தால் இந்தப் போராட்டம் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
பிரதிநிதிகள் குழுவைச் சந்தித்த பிரதமர், இந்தப் பிரச்னையை ஆய்வு செய்வதற்கு ஒரு நிபுணர் குழுவை ஏற்படுத்தப் போவதாக உறுதி கூறியுள்ளார் என்று ஆயர் அம்புரோஸ் கூறினார்.
ஆய்வுக் குழுக்கள் தேவையில்லை, இந்த கட்டுமானம் நிறுத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என்று இப்போராட்டத்தை முன்னின்று நடத்தும் S.P.உதயகுமார் கூறினார்.
இந்தப் போராட்டத்தில் இந்தியத் திருச்சபை நேரடியாக ஈடுபடவில்லை என்றும், மக்கள் மேற்கொண்டுள்ள இந்தப் போராட்டத்தை தார்மீக முறையில் திருச்சபை ஆதரிக்கிறது என்றும் ஆயர் அம்புரோஸ் மேலும் கூறினார்.
கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமானத்தை எதிர்த்து செப்டம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட 12 நாட்கள் போராட்டங்களில் கத்தோலிக்க குருக்கள் மற்றும் இருபால் துறவியரும் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.








All the contents on this site are copyrighted ©.