2011-10-10 14:17:04

அக்டோபர் 11 வாழ்ந்தவர் வழியில்..... மாயூரம் வேதநாயகம்பிள்ளை


மாயூரம் வேதநாயகம்பிள்ளை ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். இவர் 1878ல் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் நாவல், (புதினம்) தமிழில் வெளியான முதல் புதினமாகும். இவர் தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள குளத்தூரில் 1826 ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி பிறந்தார். 1876க்கும் 1888க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது தமது சொத்துக்கள் அனைத்தையும் நன்கொடையாக அளித்தார். இதனைப் போற்றும் விதமாக கோபாலகிருஷ்ண பாரதியார் நீயே புருஷ மேரு என்ற பாடலை யாத்தார்.
ஆரம்பக் கல்வியை தமது தந்தையிடம் துவங்கிய வேதநாயகம்பிள்ளை ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிக்கல்வியை தியாகராஜபிள்ளை என்பவரிடம் பயின்றார். சிறு வயதிலேயே திருமணங்கள், விருந்தினர் வருகை போன்ற நிகழ்வுகளின் போது நகைச்சுவையான கவிதைகளை எழுதினார். இவர் நீதிமன்றங்களில் பதிவாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியபின் 1856ல தரங்கம்பாடியில் முனிசீப்பு வேலையில் அமர்ந்தார். மாயவரம் மாவட்ட முனிசீப்பாக 13 ஆண்டுகள் பணி புரிந்தமையால் இவரை மாயவரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கலாயினர். இந்தக் காலகட்டத்தில் 16 புத்தகங்கள் எழுதினார். தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தையும் அப்போதே எழுதினார். வீணை இசைப்பதிலும் வல்லமை பெற்றிருந்தார். அவரது சமகாலத்தவரான தமிழறிஞர்கள் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, இராமலிங்க வள்ளலார், திருவாடுதுறை மடத்தின் மகாசன்னிதானம் சுப்பிரமணிய தேசிகர், கோபாலகிருஷ்ண பாரதியார் ஆகியோருடன் நட்பு பாராட்டி நல்ல உறவோடு இருந்தார். பிரதாப முதலியார் சரித்திரம், திருவருள் அந்தாதி, திருவருள் மாலை, தேவமாதா அந்தாதி, சத்திய வேத கீர்த்தனை, பொம்மைக் கல்யாணம், பெரியநாயகியம்மன் போன்ற பல புகழ் பெற்ற நூல்களை ஆக்கியுள்ளார் மாயூரம் வேதநாயகம்பிள்ளை. இவர் 1889ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி காலமானார்.







All the contents on this site are copyrighted ©.