2011-10-06 14:38:30

கி.மு., கி.பி., ஆகிய சொற்களை மாற்ற முயலும் BBC தொலைக்காட்சி நிறுவனம்


அக்.06,2011. கிறிஸ்துவுக்குமுன், கிறிஸ்துவுக்குப்பின் என்று காலத்தைக் குறிக்க உலகெங்கும் பயன்படுத்தப்படும் கி.மு., கி.பி., ஆகிய சொற்களை மாற்றி, BBC தொலைக்காட்சி நிறுவனம் BCE அதாவது பொதுக் காலத்திற்கு முன், CE பொதுக் காலம் என்ற சொற்களைப் பயன்படுத்த எடுத்துள்ள தீர்மானம், மனித வரலாற்றை மறந்து செயலாற்றும் போலித்தனம் என்று வத்திக்கானின் செய்தித்தாள் ஒன்று கூறியுள்ளது.
வத்திக்கானில் இருந்து வெளியாகும் L’Osservatore Romano என்ற செய்தித் தாளில் இப்புதனன்று வெளியான ஒரு முன்பக்கக் கட்டுரையில், BBCயின் இந்த முடிவு பெருமளவில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.
பிற மதங்களைப் புண்படுத்த விரும்பவில்லை என்ற காரணம் காட்டி, BBC எடுத்துள்ள இந்த முடிவு, வரலாற்றையே காட்டிக் கொடுக்கும் ஒரு முயற்சி என்றும், மேற்கத்திய கலாச்சாரத்தில் கிறிஸ்துவத்தின் சுவடுகளை அழிக்கும் ஒரு முயற்சி என்றும் இக்கட்டுரையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மனித வரலாற்றில் பிரெஞ்ச் புரட்சி, மற்றும் லெனின் புரட்சி ஆகிய காலங்களிலும் இதுபோன்று காலக் குறியீடுகளை மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதைச் சுட்டிக்காட்டும் இக்கட்டுரை, இந்த மாற்றங்கள் ஒரு சில ஆண்டுகளே நீடித்தன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
BBCயின் இந்த முடிவை இலண்டன் மேயர் Boris Johnshon உட்பட பலரும் கண்டனம் செய்துள்ளனர் என்று வத்திக்கான் செய்தித்தாள் கூறியுள்ளது.
மேற்கித்திய கலாச்சாரத்தில் கிறிஸ்தவம் பதித்துள்ள முத்திரைகளை மறுப்பதன் மூலம் வரலாற்றையே மாற்ற முயற்சிக்கும் BBC யின் இந்த முடிவு பரிதாபத்திற்குரியது என்று இக்கட்டுரையின் ஆசிரியர் Luceta Scaraffia கூறியுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.