2011-10-06 14:37:09

இலங்கை உள்நாட்டுப் போரில் கை, கால் இழந்தோருக்கு செயற்கை உறுப்புக்களைப் பொருத்துவதில் இந்திய அரசுசாரா அமைப்பு


அக்.06,2011. உலகில் உள்ள பல அரசுசாரா அமைப்புக்களில் தனியொரு இடம் பெற்றுள்ள BMVSS என்று அழைக்கப்படும் பகவான் மகாவீர் விக்லங் சமித்தி சகாய் (Bhagwan Mahaveer Viklang the Samiti Sahay) என்ற அரசுசாரா அமைப்பு இலங்கை உள்நாட்டுப் போரில் கை, கால் இழந்தோருக்கு செயற்கை உறுப்புக்களைப் பொருத்தியுள்ளது.
மிகக் குறைந்த செலவில் செயற்கை உறுப்புக்கள் செய்வதில் 'ஜெய்ப்பூர் கால்' என்று உலகப் புகழ் பெற்ற BMVSS நிறுவனம், அண்மையில் இலங்கை சென்று, அங்கு ஒரு மாத காலமாக 535 பேருக்கு செயற்கை உறுப்புக்கள் பொருத்துவதிலும், இன்னும் 600க்கும் மேற்பட்டோருக்கு ஊன்றுகோல்கள் வழங்குவதிலும் ஈடுபட்டிருந்தது.
மொத்தத்தில் இந்த அமைப்பு இலங்கை போரினால் பாதிக்கப்பட்ட 1163 பேருக்கு உதவிகள் செய்துள்ளன என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது. சென்ற ஆண்டும் இதே அமைப்பு இலங்கை சென்று 1400க்கும் அதிகமானோருக்கு உதவிகள் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
1975ம் ஆண்டு நிறுவப்பட்ட BMVSS என்ற இந்த நிறுவனம் இதுவரை 25 நாடுகளுக்குச் சென்று ஒவ்வொரு நாட்டிலும் குறைந்தது 20,000 பேருக்கு மிகக் குறைந்த செலவில் செயற்கை உறுப்புக்கள் பொருத்துவதில் ஈடுபட்டுள்ளது என்று ஆசிய செய்தி நிறுவனம் மேலும் கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.